இனவாத உணர்வுகளுக்கு உசுப்பேற்றக்கூடாது

14 07 2015

இனவாத உணர்வுகளுக்கு உசுப்பேற்றக்கூடாது 

சகல சமூகங்களினதும் குறிப்பாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் அதிகளவு ஆதரவுடன் கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து ஏற்பட்டுவந்த "மாற்றங்கள்' சிறுபான்மை இன, மதக் குழுக்கள், சமூகங்களுக்கு சிறிதளவாயினும் ஆறுதலளிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பெரும்பான்மை மேலாதிக்கவாத சிந்தனை கொண்ட சக்திகள் "இனவாத' உணர்வுகளுக்கு "உசுப்பேற்றி' விட்டு வாக்குகளை கவர்ந்திழுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதற்கான சமிக்ஞைகள் கடும் போக்கு சக்திகளிடமிருந்து வெளிப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்தத் தடவை தேர்தல் காலங்களில் அத்தகைய சக்திகளுக்கு அரசாங்கத் தரப்பின் போசிப்பு வெளிப்படையாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் வகுப்பு வாதச் சிந்தனைகளுக்கு உரமூட்டும் கருத்துக்களை இன மேலாதிக்கவாத சக்திகள் சில பரப்புரை செய்வதை அவதானிக்க முடிகிறது.

இந்தத் தடவை தேர்தல் காலங்களில் அத்தகைய சக்திகளுக்கு அரசாங்கத் தரப்பின் போசிப்பு வெளிப்படையாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் வகுப்பு வாதச் சிந்தனைகளுக்கு உரமூட்டும் கருத்துக்களை இன மேலாதிக்கவாத சக்திகள் சில பரப்புரை செய்வதை அவதானிக்க முடிகிறது. பெரும்பான்மை இனத்தின் வாக்குகளில் தெரிவாகும் அரசாங்கம் சிறுபான்மையினத்திடம் கப்பம் பெற்றுக் கொண்டு அவர்களுக்காக மட்டும் செயற்படுவதாக கடும் தேசியவாத அமைப்பான பொது பலசேனாவின் புதிய முகமாக தோற்றம் பெற்றிருக்கும் பொதுஜன பெரமுனக் கட்சியின் பொதுச் செயலாளர் இந்த வாரம் குற்றம் சாட்டியிருக்கிறார். நீண்டகால யுத்தத்தாலும் இடம்பெயர்வாலும் ஏற்பட்ட உயிர், உடைமை இழப்புக்களிலிருந்து தமிழ் மக்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இன்னமும் மீட்சி பெறமுடியாமல் இருந்துவரும் நிலையிலும் முகாம்களிலும் இடைத்தங்கல் நிலையங்களிலும் சொந்தக் காணிகளுக்குக் கூட செல்ல முடியாமல் துன்பத்துடன் இருந்துவரும் நிலையிலும் சிறுபான்மை மக்களுக்குச் சார்பாகவே இந்த அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றதென்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்திருப்பதைக் காணமுடிகிறது.

அத்துடன் நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் சிறுபான்மை மக்களுக்கு அக்கறையில்லையெனவும் தமது இனத்தின் உரிமைகளை பெற்றுக் கொள்வதில் மட்டுமே அவர்கள் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர் சாடியிருக்கும் கருத்தையும் காணமுடிகிறது. உண்மையில் "பெரும்பான்மை இனவாதம்' நடைமுறையொழுங்காக விரவிவருவதற்கு இடமளிக்கப்பட்டால் "நல்லிணக்கத்திற்கான' முயற்சிக்கு ஆபத்தை தோற்றுவித்துவிடும் எந்தவொரு பாரிய விவகாரத்திற்கும் பெரும்பான்மையினர் போராட்டமின்றி வெற்றி பெற்றுவிட முடியும். ஆனால் தப்பபிப்பிராய உணர்வின் நிரந்தரமான அழுத்தத்தினால் தமது நியாயபூர்வமான கோரிக்கைகளைக் கூட சிறுபான்மையினர் தளர்த்திக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அத்துடன் சிறபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள் அபாயமும் அதிகளவில் காணப்படுகிறது.

நியாயபூர்வமான உரிமைகளை வலியுறுத்தி சாத்வீக வழியில் நடத்தப்படும் போராட்டங்கள் கூட அடக்கியொடுக்கப்பட்ட கடந்தகால பதிவுகள் இருந்து வருகின்றன. அதேவேளை அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் சிறுபான்மையினரை தேசவிரோத சக்திகளென வகைப்படுத்தி பெரும்பான்மையினர் மத்தியில் நிரந்தரமாகவே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த உணர்வுகளைத் தட்டியெழுப்பி தமது "வாக்கு வங்கி' யைப் பெருக்குவதற்கும் சில பெரும்பான்மை மேலாதிக்கவாத "கடும்போக்கு சக்திகள்' முயற்சிப்பதும் இருந்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இந்த முயற்சிகளும் பரப்புரைகளும் தீவிரமடையக்கூடும். இந்த சக்திகளை எந்த இன, மதத்தைச் சார்ந்தவர்களாயினும் பொதுமக்கள் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதேவேளை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும், சுயேச்சைக்குழுக்களும் இன, மதவாத விரோதத்தை தூண்டும் கருத்துக்களுக்கு சிறிதளவும் இடமளிக்காத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள், அவற்றைத் தீர்த்துவைக்கக்கூடிய தங்களின் திட்டங்கள், ஆற்றல்கள் பற்றி பிரசாரப்படுத்துவது தவறானதல்ல. ஆனால் இதர இனங்கள், மதக் குழுக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான "விரோத' உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வது அவசியம்.

 thinakkural.lk14 07 2015