தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் சில புலம்பெயர் தமிழ் இணைய ஊடகங்கள்- இரா.துரைரத்தினம்

03 11 2015

தமிழ் மக்களை தவறாக வழிநடத்தும் சில புலம்பெயர் தமிழ் இணைய ஊடகங்கள்- இரா.துரைரத்தினம்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் பலர் யதார்த்தங்களையும் உண்மைகளையும் அறியாதவர்களாக வாழ்கின்றார்கள் என்பதற்கு இலங்கையில் நடந்த இறுதிப்போரும் அதில் மரணமடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் மீண்டும் வருவார் என நம்பியிருப்பதும் ஒர் ஆதாரமாகும். ஓவ்வொரு நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரும் போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரர் தின உரைநிகழ்த்துவார் என மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் நம்புகின்றனர். இவ்வாறு மக்களை மாயை ஒன்றிற்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுபவை மேற்குலக நாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்கள் எனலாம்.

ஆரம்பகாலம் தொடக்கம் ஊடகங்களில் முக்கிய பணியாக இருப்பது உண்மைத் தகவல்களை சரியாக மக்களுக்கு சொல்வதுதான். ஊடகத்துறையின் முதல் வரவான அச்சு ஊடகமான பத்திரிகைகள் இலங்கையிலும் சரி உலகில் வெளிவரும் அனைத்து மொழி பத்திரிகைகளும் உண்மைத்தகவல்களை மக்களுக்கு சொல்வதை தாரகமந்திரமாக கொண்டு செயல்படுகின்றன. அதன் பின்னர் வெளிவந்த ஒலி ஒளி இலத்திரனியல் ஊடகங்களும் உண்மைத்தகவல்களை மக்களுக்கு சொல்வது என்ற கடப்பாட்டில் இருந்து விலகியதில்லை என்றே சொல்லலாம். விதிவிலக்காக சில சம்பவங்களை தவிர. (சில சமயங்களில் இலங்கையில் இருந்து வெளிவரும் அரச ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டதுண்டு) ஆனால் இலத்திரனியல் ஊடகங்களின் பிந்திய வரலான இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் அறிமுகமான பின்னர் உண்மையை உலகிற்கு சொல்வது என்ற ஊடகதர்மத்திலிருந்து விலகி நினைத்ததை சொல்வது, தாம் விரும்பிய எதையும் சொல்லாம் என்ற ஆபத்தான போக்கு இன்று காணப்படுகிறது.

மேற்குலக நாடுகளில் தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் வெளிவரும் இணையத்தளங்கள் கட்டுப்பாட்டோடும் ஊடக அறநெறிகளுக்கு உட்பட்டு வெளிவருகின்ற போதிலும் தமிழில் வெளிவரும் இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் மிகவும் ஆபத்தான திசையை நோக்கியே செல்கின்றன, மக்களை தவறான திசையில் வழிநடத்தி செல்கின்றன என்பதே உண்மையாகும். இலங்கையிலிருந்து வெளிவரும் பெரும்பாலான இணையத்தளங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் எத்தகைய பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனவோ அதே போன்று பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்களும் செயல்படுகின்றன. ஒரு சில பதிவு செய்யப்படாத இணையத்தளங்களும் இலங்கையிலிருந்து வெளிவருகின்றன. இவைதான் மிக மோசமான கலாசார சீரழிவுகளையும் தனிமனித அவதூறுகளையும் பரப்பும் இணையத்தளங்களாக காணப்படுகின்றன. அதேபோன்று மேற்குலக நாடுகளிலிருந்து புற்றீசல்போல ஆயிரக்கணக்கான தமிழ் இணையத்தளங்கள் இப்போது காணப்படுகின்றன. எங்கிருந்து யார் இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் எதுவும் இன்றி பொய்களையும் புரட்டுக்களையும் மக்களை ஏமாற்றி திசைதிருப்பும் செய்திகளையும் வெளியிடுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு சில சம்பவங்களை குறிப்பிடலாம்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்களாகவும், அவர்கள் வெற்றிகளை மட்டுமே பெற்றுவருகிறார்கள், பின்னடைவுகள் தோல்விகள் எதனையும் சந்தித்ததில்லை, சந்திக்கப்போவதில்லை என்ற தோரணையிலேயே மேற்குலக நாடுகளில் இருந்து ஒளிப்பரப்பான தமிழ் வானொலி தொலைக்காட்சிகளும் இணைத்தளங்களும் செய்திகளை வெளியிட்டு வந்தன. மன்னார் பூநகரி பாதையை இராணுவத்தினர் கைப்பற்றிய வேளையில் பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியின் அரசியல் நிகழ்ச்சியில் இனிமேல் கிளிநொச்சியையோ அல்லது வன்னியையோ விடுதலைப்புலிகளால் தக்க வைக்க முடியாது என்ற யதார்த்தம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதனை கேட்ட பலர் அப்படி நடக்காது, விடுதலைப்புலிகளிடமிருந்து வன்னியை இராணுவம் ஒரு போதும் கைப்பற்ற முடியாது என கொதித்தெழுந்தனர். யதார்த்த நிலையை கூறியவர் மீதும் அந்த வானொலி மீதும் மிக இலகுவாக துரோகி பட்டத்தை சூட்டினர். ஆனால் மன்னார் பூநகரி பாதை இராணுவ வசம் வீழ்ச்சியடைந்து ஒரு வருடகாலத்திற்குள் கிளிநொச்சியும் அதன் பின்னர் வன்னி முழுவதும் இராணுவத்தினரிடம் வீழ்ச்சியடைந்தது. முள்ளிவாய்க்கால் வரை சென்ற பின்னர் கூட விடுதலைப்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி முன்னேறி வருகிறார்கள் என்ற பொய்யான தகவல்களையே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தன.

இறுதியாக 2009 மே 18ஆம் திகதிவரை விடுதலைப்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி முன்னேறிவருகிறார்கள் என மக்களை தவறான வழியில் திசை திருப்பும் செய்திகளையே வெளியிட்டு வந்தன. இறுதியாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி வெளிவந்த போது மேற்குலக நாடுகளிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் இந்த செய்தியை வெளியிடாது மறைத்து விட்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசு ஆதரவு வானொலிகளும் இணையத்தளங்களும் மட்டும் அச்செய்திகளை வெளியிட்டன. இதில் சற்று விதிவிலக்காக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் ஒளிப்பரப்பி கொண்டிருந்த ஜி.ரி.வி தொலைக்காட்சி பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி அறிவித்து அவருக்கு ஒரு வாரத்திற்கு அஞ்சலி செலுத்துவதாக அறிவித்தது. அப்போது தாய்லாந்தில் இருந்த கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய செவ்வியையும் ஒளிப்பரப்பியிருந்தது. அச்செவ்வியில் பிரபாகரனும் அவரது குடும்பமும் இறந்து விட்டதாக பத்மநாதன் தெரிவித்திருந்தார்.

ஆனால் மேற்குலக நாடுகளில் இருந்து வெளிவந்த தமிழ் இணையத்தளங்கள் சில பிரபாகரன் இறக்கவில்லை, அவர் தப்பி வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக உள்ளார் என அறிவித்தன. அச்செய்தியையே புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் நம்பினார்கள். இதனால் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற தகவலை மக்களுக்கு சொன்ன ஜி.ரி.வி என்ற தொலைக்காட்சிக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டது. அத்தொலைக்காட்சி ஒருவார காலம் சீராக இயங்கமுடியாத நெருக்கடிகளை சந்தித்தது. ஐரோப்பிய நாடுகளில் இருந்த அத்தொலைக்காட்சியின் கிளை அலுவலகங்கள் சில காலத்திற்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சிலரும் தமது சுயலாபத்திற்காக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், அவர் மீண்டும் வருவார், மீண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகும் என அடிக்கடி சொல்லி மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களை திருப்திப்படுத்தும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பழ.நெடுமாறன் போன்ற சிலர் தாம் பிரபாகரனுடன் பேசியதாகவும் அவர் நலமாக உள்ளார், உரிய நேரத்தில் வெளியே வருவார் என அண்மைக்காலத்தில் கூட கூறிவருகிறார். தமிழகத்தில் உள்ள சில ஊடகங்களும் பரபரப்பிற்காக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்பவைக்கும் வகையில் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தால் காட்டப்பட்டது பிரபாகரனின் உடல் அல்ல என அண்மையில் கூட ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி கூறியதாக செய்திகளை வெளியிட்டு எனவே பிரபாகரன் உயிருடன் உள்ளார் என நிரூபிப்பதற்கு சில இணையத்தளங்கள் முயற்சி செய்திருந்தன. மேற்குலக நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ் வானொலி தொலைக்காட்சி இணையத்தளங்களில் ஒரு சிலவற்றை தவிர பெரும்பாலானவை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவர் வருவார் என்ற பொய்யான செய்தியையே சொல்லி வருகின்றன. இதை நம்பும் அப்பாவி மக்கள் பலர் உள்ளனர். இவ்வாறு உண்மைகளை மறைத்து மக்களை மாய உலகில் வைத்திருப்பதற்கே புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ் இணையத்தளங்கள் முயற்சிக்கின்றன.

அது போன்றுதான் கடந்த தேர்தல் காலத்திலும் மேற்குலக நாடுகளிலிருந்து வெளிவரும் இணையத்தளங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சிகளில் இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கின் தேர்தல் களநிலவரம் சொல்லப்படவில்லை, யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்ற தகவல்கள் கூட மறைக்கப்பட்டு பொய்யான ஒரு தோற்றத்தையே காண்பித்தார்கள். உதாரணமாக யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஐந்து ஆசனங்களுக்கு மேல் பெறுவார்கள் என்றும் ஏனைய இரு கட்சிகள் ஒவ்வொரு ஆசனங்களை பெறுவார்கள் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதனை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் இவர்கள் கூறியதற்கு எதிர்மாறாகவே அமைந்தது. அது போல அண்மையில் தமிழ் இணையத்தளம் ஒன்றில் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. ஒரு செய்தியை பார்த்தால் அதில் உண்மை இருக்கிறதா என அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதனை உணர்ந்து கொள்ள முடியாத வேறு சில இணையத்தளங்கள் அதனை மீள்பிரசுரம் செய்திருந்தன. அந்த இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி இதுதான்.

கொழும்பில் உள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு சென்ற தமிழ் குடிசார் சமூகம் என்ற தரப்பினர் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீங்கள் வலுவிழக்க செய்து விட்டீர்கள், தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டீர்கள், என திட்டி தீர்த்து ஏசியதாகவும், அப்போது தாங்கள் அத்தீர்மானத்தை வலுவிழக்க செய்யவில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அதனை வலுவிழக்க செய்திருந்தனர் என கூறி ஒரு வீடியோ ஒன்றை காட்டியதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த சிவில் சமூக பிரதிநிதிகள் யார் என்ற விபரம் அச்செய்தியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை ( அச்செய்தி உண்மையாக இருந்திருந்தால் யார் அந்த சிவில் சமூக பிரதிநிதிகள் என்பதை அவர்கள் வெளியிட்டிருப்பார்கள்) அனுபவம் வாய்ந்த ஒரு ஊடகவியலாளனால் இச்செய்தியை பார்த்த உடன் இது உண்மையான செய்தியா அல்லது புனையப்பட்ட செய்தியா என்பது தெரிந்து விடும். கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலக அதிகாரிகள் மட்டுமல்ல ஜெனிவா அல்லது நியூயோர்க் தலைமையங்களில் உள்ள அதிகாரிகளும் ஒரு போதும் ஒரு தரப்பிடம் இன்னொரு தரப்பு பற்றி கூற மாட்டார்கள். இது ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் பொதுவான இறுக்கமான கொள்கை. எந்த தரப்புடன் பேசுகின்ற போதும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வார்களே தவிர வேறு ஒரு தரப்பு பற்றிய குற்றச்சாட்டை ஐ.நா.அதிகாரிகள் ஒரு போதும் முன்வைக்க மாட்டார்கள். அப்படி முன்வைத்தால் அவர்கள் ஐ.நா.வின் கொள்கையை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும். அடுத்தது அச்செய்தியை எழுதியவருக்கு ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரைந்தது யார், பிரேரணையை முன்வைத்தவர்கள் யார் என்ற எந்த விபரங்களும் தெரியாதவர் போல ஐ.நா.அதிகாரிகள் அப்பிரேரணையை வரைந்தது போல எழுதியிருந்தார்கள். ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் ஐ.நா.சபைக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. அந்த பிரேரணையை வரைந்தது அமெரிக்காவுடன் சேர்ந்த சில நாடுகள், நிறைவேற்றியது ஐ.நா.மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள். ஐ.நா.சபைக்கோ அதிகாரிகளுக்கோ இதில் சம்பந்தம் இல்லாத நிலையில் எப்படி ஐ.நா.அலுவலகத்திற்கு சென்று சிவில் சமூகத்தினர் ஐ.நா.அதிகாரிகளை ஏச முடியும். இந்த விடயங்களை அறியாதவர்களாக தமிழ் சிவில் சமூகத்தினர் ஐ.நா.அலுவலகத்திற்கு சென்று ஐ.நா.அதிகாரிகளை திட்டி தீர்த்தார்கள் என்பதை எப்படி நம்புவது? ஆனால் வேடிக்கை என்ன வென்றால் மேற்குலக நாடுகளிலிருந்து வெளிவரும் பெருந்தொகையான தமிழ் இணையத்தளங்கள் அச்செய்தியை மீள்பிரசுரம் செய்திருந்தன.

இலங்கையை பொறுத்தவரை மக்களை சென்றடையும் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு கூறும் கடப்பாடு உடையன. ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியை மீள்பிரசுரம் செய்வதாக இருந்தால் அல்லது ஒலிப்பரப்புவதாக இருந்தால் முதலில் வெளியிட்ட ஊடகங்களை மேற்கோள்காட்டியே அதனை வெளியிடுவார்கள். ஆனால் மேற்குலக நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ் இணையத்தளங்கள் அல்லது ஏனைய ஒலி ஒளி ஊடங்கள் பொறுப்பு கூறும் கடப்பாட்டை கொண்டிருக்கவில்லை, குறிப்பாக தமிழ் இணையத்தளங்கள் யார் எங்கிருந்து வெளியிடுகிறார்கள் என தெரியாத அநாமதேய ஊடகங்கள். ஒரு ஊடகத்தில் பிரத்தியேக செய்தி அல்லது காணொளி வெளிவந்த அடுத்த நிமிடத்தில் அதனை திருடி பல தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்டு விடுகின்றன. பிரத்தியேகமாக அந்த செய்தியை எடுப்பதற்கும் காணொளியை எடுப்பதற்கும் செலவு செய்த உழைப்பை மிக இலகுவாக பலரும் திருடி விடுகின்றனர். இது மேற்குலக நாடுகளில் ஏனைய மொழி ஊடகங்களில் காணப்படவில்லை, தமிழ் இணையத்தளங்களை நடத்துபவர்களிடம் தான் இந்த இழிநிலை காணப்படுகிறது.

மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களைப் பொறுத்தவரை இங்கு பொறுப்பு கூறக்கூடிய கடப்பாடு உடைய பத்திரிகைகள் எதுவும் வெளியாவது இல்லை, மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் அந்தந்த நாடுகளின் மொழிகளை எழுத வாசிக்க தெரிந்தவர்களும் அல்ல. செய்திகளை அறிந்து கொள்வதற்காக இத்தகைய அநாமதேய தமிழ் இணையத்தளங்களை தான் அவர்கள் நாட வேண்டி உள்ளது. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் பலவீனத்தை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ் இணையத்தள வியாபாரிகள் பிரபாகரன் மீண்டும் வருவார் 5ஆம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்ற மாயைக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றன. தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ வியாபாரிகளும் அதனைத்தான் விரும்புகிறார்கள். மேற்குலக நாடுகளில் தமிழ் மக்களை தவறான திசைக்கு அழைத்து செல்லும் ஊடக கலாசாரத்திற்கு முற்று புள்ளி வைக்கவில்லை என்றால் அந்த மக்களின் எதிர்காலம் இருள்மயமானதாகவே இருக்கும்.

thinakkathir.com 01 11 2015