21 07 2017

புஷ்வாணமாகிப்போகும் தமிழர்களின் எதிர்பார்ப்பு -

ரொபட் அன்டனி!!

“பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இதற்கு அரசியல் தலைமையிடம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும்”
– மூத்த ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க
தமிழ் மக்களின் அரசியல் ரீதியான அபிலாஷைகள் மற்றும் நியாயமான அதிகாரங்கள் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் என்பன மீண்டுமொருமுறை புஷ்வாணமாகிவிடும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தும் கூட அந்த சந்தர்ப்பத்தில் பயனை பெற்றுக்கொள்ள முடியாததொரு துர்ப்பாக்கிய நிலைமைக்கு இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அரசியல் நகர்வுகளும் அரசியல் பதிவுகளும் வரலாறு முழுவதுமே ஒன்றையொன்று மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றித்தான் வரும்போல் தெரிகின்றது.வரலாற்று நிகழ்வுகள், பதிவுகள், தொகுப்புக்கள் என்பன மீண்டும் மீண்டும் நிகழ்காலத்திற்குள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் அரசியலை விசித்திரமானது என்று அவ்வப்போது ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் போலும்.சில சந்தர்ப்பங்களில் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் அவர்களது அரசியல்சார் உரிமைகளும் இந்த விசித்திரமான அரசியல் என்ற குழிக்குள் புதைக்கப்பட்டுவிடுகின்றன.இறுதியில் யாருக்கும் வெற்றி கிடைக்காவிடினும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒருசிலருக்கு மட்டும் தோல்வி என்பது நிச்சயமாகி போய்விடுகின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்காக நீண்டகாலமாக போராடி வருகின்றனர். சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தமிழ் பேசும் மக்கள் தமக்கொரு நியாயமான தீர்வை வழங்கக்கோரி போராடி வருகின்றனர்.கடந்த காலங்களில் சாத்வீகப் போராட்டங்கள், ஆயுதப்போராட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டாலும் அதன் நோக்கங்கள் ஒரு தீர்வை நோக்கியதாகவே அமைந்திருந்தன.ஆனாலும் தென்னிலங்கையில் இணக்கப்பாடு ஏற்படாமை அரசியல் தீர்வை வழங்குவதற்கான ஒரு அர்ப்பணிப்பின்மை போன்ற காரணங்களினால் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத்திட்டமானது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது.கடந்த காலங்களில் தீர்வை முன்வைக்கும் நோக்கில் அரசாங்கங்கள் எவ்வளவுதான் முயற்சிகளை முன்னெடுத்தாலும் அவை வெற்றியை நோக்கி நகரமுடியாமல்போயின.அரசாங்கங்கள் இதயசுத்தியுடன் தீர்வு காண முயற்சிகளை முன்னெடுத்தாலும் தீர்வுத்திட்டங்களை குழப்புவதற்கென்றே அவ்வப்போது சக்திகள் உருவாகிவிடும்.

அந்த சக்திகள் தீர்வுத்திட்டத்தை குழப்பி அனைத்தையும் ஆரம்பகட்டத்திற்கே கொண்டுவந்து விடும். ஒவ்வொரு முறையும் தீர்வுத்திட்டத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது வரலாற்றில் இடம் பெற்ற இந்த குழப்பகர செயற்பாடுகள் மீண்டும் இடம்பெற்று விடும்.அதனால்தான் வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் சுற்றிவருவதாக இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்கு வழிபிறந்துள்ளதாக அனைவரும் நம்பினர்.ஆனால் யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் இதுவரை ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி எந்தத் தரப்பும் நகரவில்லை.தீர்வுத்திட்டம் என்ற பேச்சை எடுத்தாலே தென்னிலங்கையில் எதிர்ப்புகள் அதிகமாகிவிடும் என்பதுடன் இனவாத சக்திகளின் கைகள் ஓங்கிவிடும்.
அதனாலேயே பதவியில் இருக்கும் அரசாங்கங்கள் அதனை ஒரு பக்கத்தில் போட்டுவிடும். இதுவே யதார்த்தமானதாக கடந்தகாலம் முழுவதும் இடம்பெற்று வந்துள்ளது.அந்தவகையில் தற்போதுகூட இவ்வாறான அரசியல்தீர்வு மற்றும் அரசியல் அமைப்பு போன்ற முயற்சிகளுக்கான எதிர்ப்புகள் மேலோங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அனைத்து விடயங்களும் ஒன்று சேர்ந்து ஒரு தீர்வுத்திட்டம் என்ற இடத்திற்கு செல்லும்போது வரலாற்றில் இடம்பெற்றதைப் போன்றே தற்போது ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.விசேடமாக அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நாட்டின் பிரதான சங்கபீடங்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளன.இது நாட்டில் தற்போதைய நிலைமையில் பரபரப்பு நிலையை தோற்றுவித்துள்ளது. சங்க பீடங்களின் இந்த அறிவிப்பானது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.எங்கே தீர்வுத்திட்டம் உள்ளடங்கிய புதிய அரசியலமைப்பு என்ற கனவு கனவாகவே இருந்துவிடுமோ என்ற சந்தேகம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள் தாம் எங்கே நம்பிக்கை வைத்திருந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுவிடப்போகின்றோமோ என்ற உணர்வுக்கு ஆளாகியுள்ளனர்.அதாவது ”வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக” தமிழ் பேசும் மக்களின் தீர்வும் அந்தத் தீர்வு உள்ளடக்கப்பட்ட அரசியலமைப்பும் அமைந்துவிடுமா என்ற கேள்வியே தற்போது எழுகின்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமானது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.இதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்பட்டு பிரதான வழிநடத்தல் குழுவும் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெகுவிரைவில் பிரதான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில் அதுதொடர்பான கருத்துக்கள் வெளியிடப்படுகின்ற சூழலில் சங்கப்பீடங்களின் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.அந்த வகையில் உடனடியாகவே மகாநாயக்க தேரர்களை சந்தித்து உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் தொடர்பில் சங்க பீடங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் வரைவு தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.தற்போது அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் மிகப்பெரியதொரு இடைவெளி உருவாகிவிடுமா? என்ற கருத்து மேலோங்க ஆரம்பித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன இந்த நாட்டின் 64 இலட்சம் மக்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆணையை வழங்கியுள்ளதாகவும் அந்த ஆணைக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.அதாவது எந்த தடைகள் வந்தாலும் புதிய அரசியலமைப்பு வரைவு கொண்டுவரப்படும் என்றும் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென்றும் அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாக அரசாங்கம் உறுதிப்படத் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.ஆனால் இது எந்தளவு தூரம் சாத்தியமாகும் என்பதே இங்கு முன்வைக்கப்படுகின்ற பிரதான தர்க்கமாக அமைந்திருக்கின்றது. உண்மையில் அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினையைத் தீர்த்து அதற்குரிய தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கி அரசியலமைப்பை கொண்டுவரவேண்டுமென்ற இதயசுத்தியுடனான எதிர்பார்ப்பு காணப்படின் இதனை முன்னெடுக்கலாம்.
ஆனால், அரசாங்கம் இந்த விடயத்தில் இதயசுத்தியுடன் இல்லாமல் இதனை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் செயற்படுமாயின் ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்கள் மீது பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியே ஆட்சிக்கு வந்தனர்.

அதுமட்டுமன்றி புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் அதிக செல்வாக்கு செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் நம்பியே தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வெளியிட்டனர்.தோற்கடிக்கவே முடியாது எனக்கூறப்பட்ட முன்னைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.அதாவது புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்னெடுப்பதுடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைத்தனர். அதனூடாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்குகளை அள்ளிவழங்கி புதிய அரசாங்கத்தை உருவாக்கினர்.ஆனால், வரலாற்றில் இடம்பெற்றதைப் போன்றே புதிய அரசாங்கமும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தையும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளையும் இழுத்தடித்துக்கொண்டுவருவதையே காணமுடிகின்றது.

தற்போது எழுந்துள்ள அரசியலமைப்பு எதிர்ப்பு கோஷங்களினால் அரசாங்கம் இந்த செயற்பாட்டிலிருந்து பின்வாங்கிவிடுமா என்ற அச்சம் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.காரணம் வரலாறுகள் இதற்கு சிறந்த உதாரணங்களை கூறியுள்ளன. எனவே அரசாங்கமானது இந்த விடயத்தில் பின்வாங்காமல் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.இல்லாவிடின் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தையும் இழந்துவிட்டதாகவே வரலாற்றில் பதியப்படும். அதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.

வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.எனவே இந்த சந்தர்ப்பத்திலும் தீர்வைக் காண முடியாவிடின் அது வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. அரசாங்கத்தின் அரசியல் ரீதியிலான தீர்மானத்திலேயே அனைத்து விடயங்களும் தங்கியிருக்கின்றன.அதேபோன்று என்றுமில்லாதவாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தீர்வைப் பெறவேண்டும் என்பதற்காக அரசாங்கத்தை எதிர்பார்க்காத ஒரு போக்கை கடைப்பிடித்து வருகின்றது. அந்த சந்தர்ப்பத்தையும் வீணாக்கிவிடும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.இது தொடர்பில் மூத்த சர்வதேச ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க இவ்வாறு விபரிக்கிறார். அதாவது இனப்பிரச்சினையை தீர்க்க முற்படும்போது வரலாறு முழுவதும் இவ்வாறான பிரச்சினைகளும் தடங்கல்களும் ஏற்பட்டே வந்துள்ளன.ஆனால் பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு உண்மையிலேயே இந்தப்பிரச்சினைய தீர்க்கவேண்டும் என்ற அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு காணப்படின் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை.இதற்கு அரசியல் தலைமையிடம் இந்த அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு இருக்கவேண்டும். இதற்கு சில உதாரணங்களை கூறலாம். அதாவது 1987 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன மாகாண சபை முறைமையை கொண்டுவந்தபோது அதனை பிக்குகள் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. பிக்குகள் மத விடயங்களை பார்த்துக்கொள்ளட்டும். அரசாங்கம் நாட்டை பார்த்துக்கொள்ளும் என்று கூறிவிட்டார்.அவ்வாறானதொரு அரசியல் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் காணப்படின் பிரச்சினையை தீர்ப்பதில் சிக்கல் இல்லை. எடுக்கப்படும் நடவடிக்கைகள் சரியா பிழையா என்பது வேறு விடயம்.ஆனால் ஒரு விடயத்தை அரசியல் ரீதியில் மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று சரத் பொன்சேகாவை கைது செய்தபோது தேரர்கள் எதிர்த்தனர்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதனை கவனத்திற்கொள்ளவில்லை.நான் மீண்டும் கூறுகின்றேன். முன்னெடுக்கப்படும் கொள்கை அல்லது செயற்றிட்டம் சரியா பிழையா என்பது வேறு விடயம். ஆனால் அதனை முன்னெடுப்பதற்கான தீர்மானமே இங்கு முக்கியமானதாகும்.

எனவே எவ்வாறான தடைகள் வந்தாலும் அரசாங்கத்துக்கு நேர்மையான எதிர்பார்ப்பு இருப்பின் ஒரு அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற நோக்கம் காணப்படின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதில் எந்த சிக்கலும் இல்லை. வரலாற்றில் இதற்கு நாம் உதாரணங்களைக் கூட பெறலாம் என்று அவர் கூறுகிறார்.அந்த வகையில் பார்க்கும்போது அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினையைத் தீர்த்து நியாயமான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்ற நோக்கம் காணப்பட்டால் தீர்வை அடைவதில் எந்த சிக்கலும் இல்லை என்பது தெளிவாகின்றது. அதனை நோக்கி அரசாங்கம் பயணிக்குமா என்பதே தற்போது விவாதப்பொருளாக உள்ளது.தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தஎதிர்பார்ப்புக்கள் மீண்டுமொருமுறை புஷ்வாணமாகிவிடும் சூழல் மீண்டும் உருவாகியுள்ளது.அதிலிருந்து மீண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வழங்கிய அமோக ஆதரவைக் கருத்தில் கொண்டு இந்த வரலாற்றுக்கடமையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.
-ரொபட் அன்டனி- ilakkiyainfo.com 09 07 2017

Published in Tamil
12 07 2017

நமது நாட்டில் தோல்வியடைந்த அரசியலமைப்புகள்

இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க விடமாட்டோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதவாதமும் அவ்வாறே என்றெல்லாம் பொறுப்புள்ள பலதரப்பால் கூறப்பட்டு வருகின்றது. கடந்த முப்பதாண்டுகால உள்நாட்டுப் பிரச்சினை, அதாவது இனப் பிரச்சினைக்கு சகல தரப்பினரும் தமிழர்களை, தமிழ் அரசியல் தலைவர்களை நோக்கி குற்றம் சாட்டுவதிலும் பின்னிற்பதில்லை.

அதுவொரு புறமிருக்க, நாட்டின் அரசியலமைப்பு மிக உயர்ந்த போற்றுதலுக்குரிய ஆவணம். அதைப் போற்றிப் பாதுகாத்து அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பிசகாது நாடு ஆளப்பட வேண்டும். அதன்படியே அரசியல், நிர்வாக அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரதிநிதிகளும் அதேபோல் அரச நிர்வாகத்தை இயக்கிச் செல்லும் சகல அரசாங்க அதிகாரிகளும் செயற்பட வேண்டுமென்றும் கூறப்படுகின்றது, எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தீர்க்கமாக ஆராய்ந்து நாட்டின் நலனுக்காகவும் நாட்டு மக்களின் கௌரவத்தைக் காக்கக் கூடியதாகவும் நாட்டின் அரசியலமைப்பு வரையப்பட்டுள்ளது. அதைப் போற்றிப் பாதுகாக்கவும் அதன்வழி செயற்படவும் உறுதியளிக்கின்றோம், சத்தியம் செய்கின்றோம் என்று சகல நாட்டை நிர்வகிக்கும் அரசியல் மற்றும் அரச பணிகளில் ஈடுபட்டோர் வெளிப்படுத்தி உறுதியுரைத்தே தம் பணியில் இணைகின்றனர். இது நமது நாட்டில் உள்ள நடைமுறை.

இன்று அரசியலமைப்பொன்றை புதிதாக உருவாக்குவது அல்லது திருத்தம் செய்வது அதுவுமில்லாவிட்டால் உள்ளதைத் தொடர்வது என்று பல கூற்றுகள் வெளிப்படுகின்றன. இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புகளைக் கண்டுள்ளது. புதிதாக நான்காவது அரசியலமைப்பு பற்றி பேசப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை ஏன் ஏற்பட்டுள்ளது ? இதுவரை நடைமுறையில் இருந்த மற்றும் இருக்கும் அரசியலமைப்புகள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளாற்றும் நோக்கில் தோல்வியடைந்து விட்டனவா ? அவை நாட்டுக்குப் பொருத்தமற்றவையா ? நாட்டு மக்களை ஒன்றிணைத்து வழிநடத்தும் செயற்பாட்டில் தோல்வி கண்டுவிட்டனவா என்று ஆராய வேண்டும் தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி அல்லது கைவிட்டு புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் நாட்டில் இனப் பிரச்சினை தீரும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் கிட்டும் என்று தமிழர் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கின்றது. தமிழருக்கு கூடிய உரிமைகள், அதிகாரம் கொடுக்க வழி செய்யக் கூடாதென்று ஒரு தரப்பு கூறுகின்றது. இவையெல்லாம் காலத்தை வீணடித்து மக்களைத் திசை திருப்பும் வெட்டிப் பேச்சுகள் என்றால் அதுவே சரியாயமையும்.

அரசியல் அமைப்பில் எது இடம்பெற வேண்டும், எப்படியானவை இடம்பெற வேண்டுமென்று தமிழர் தரப்பு மூளையைக் கசக்கிப் பிழிந்து மனநிலை பாதிக்கப்படுமளவிற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவே இன்றைய உண்மை நிலை, மறுக்க முடியாத யதார்த்த நிலை. நாட்டின் அரசியலமைப்புகள் முறையாக தவறின்றி இந் நாட்டில் நடைபெற்றிருந்தால், நடைமுறையில் பேணப்பட்டிருந்தால் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமென்ற பெயரில் சுதேசிகளின் ஆட்சிக்குட்பட்ட கடந்த எழுபது ஆண்டுகளில் நாட்டில் பூதாகரமாக வெளிப்பட்ட இனப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பதை எவரும் புரிந்து கொண்டதாயில்லை. புரிய முயற்சிப்பதாயுமில்லை. விட்ட தவறுகளைக் கண்டும் காணாததுபோல் பிரச்சினையின் மூலத்தை மறைத்து வேறுபக்கம் கைநீட்டுகின்றனர். ஆம். இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு பிரித்தானியரான சோல்பரி பிரபுவால் வரையப்பட்டது. அதைச் சோல்பரி அரசியலமைப்பு என்கின்றோம். அந்த சோல்பரி அரசியலமைப்பில் நாட்டில் வாழும் சிறுபான்மையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவென்று 29ஆம் சரத்து இணைக்கப்பட்டிருந்தது. அதன்படி பாராளுமன்றத்தில் சிறுபான்மையினரைப் பாதிக்கும் ஏதாவது

சட்ட மூலம் கொண்டுவரப்படுமானால் அதற்கு சிறுபான்மையினர் திருப்திப்படக் கூடியதாக அவர்களது ஆதரவும் பெற வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. அதாவது சிறுபான்மையினரின் ஒப்புதலின்றி அவர்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டமும் கொண்டுவரப்படக் கூடாது என்பது அரசியலமைப்பின் விதி. நாட்டின் அதியுயர் ஆவணமான அரசியலமைப்பு முதலாவது சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத்தால் கௌரவிக்கப்படவில்லை. பிரித்தானியர் இந்நாட்டிலிருந்து வெளியேறிய போது இங்கிருந்த, வாழ்ந்த அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக, சமத்துவமாக உரிமைகளுடன் வாழ்வார்கள். வாழவேண்டும் என்ற நோக்கில் நமது நாட்டிற்கு வழங்கிய அரசியலமைப்பு அது உருவாகிஓரிரு வருடங்களிலேயே மீறப்பட்டது. புறக்கணிக்கப்பட்டது.

இந்த நாட்டில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கும் உரித்தாக பிரித்தானியரால் வழங்கப்பட்ட குடியுரிமை மற்றும் வாக்குரிமைகள் அன்றைய அரசியலமைப்பின் 29 ஆவது சரத்துக்குப் புறம்பாக மீறப்பட்டன. அம் மக்களது குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக, நாட்டில் ஏனைய சமூகங்களுக்குள்ள உரிமை மறுக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டனர். அரசியலமைப்பு மீறப்பட்டது. அடுத்து 1956 இல் மூன்றாவது பாராளுமன்றத்தில் நாட்டின் ஒரு பாரம்பரிய, பழைமை வாய்ந்த இனமான தமிழினத்தின் மொழியுரிமையும் பறிக்கப்பட்டது. தமிழர் தரப்பினது மட்டுமல்ல நாட்டின் அன்றைய தேசியத் தலைவர்களான கலாநிதி என்.எம். பெரேரா , கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா, எட்மண்ட் சமரக் கொடி போன்ற சிங்களத் தலைவர்களின் எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாது நாட்டின் ஒரே நிர்வாக மொழி என்ற தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவும் அன்று நடைமுறையிலிருந்த அரசியலமைப்பின் 29 ஆம் சரத்தை மீறுவதாகவே அமைந்தது.

1964 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீமாவோ சாஸ்திரி உடன்படிக்கையின் படி 1965 இல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நாட்டற்றவர்களாக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சட்டமும் பிரித்தானியரால் இலங்கைக் குடிமக்கள் என்று அங்கீகரிக்கப்பட்ட அவர்களுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமை பறிப்பு மட்டுமல்ல உலகிலேயே இதுவரை பாராளுமன்றத்தால் வரையப்பட்ட மனித ஏற்றுமதிச் சட்டமாகவுள்ளது. அதன்பின்னர் உருவாக்கப்பட்ட 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள் பெயரளவிலாவது சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற சோல்பரி அரசியலமைப்பின் 29 ஆம் சரத்து நீக்கப்பட்டு எதுவும் செய்யலாம் எப்படியும் செய்யலாம் என்ற நிலையில் ஆக்கப்பட்டன.

நாட்டு மக்கள் அனைவரதும் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று சகல அரசியலமைப்புகளிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த போதும் 1956, 1958, 1977, 1979, 1981, 1983 என்று தொடர்ச்சியாக நாட்டில் நிகழ்த்தப்பட்ட இனவெறிப் பயங்கரவாத செயற்பாடுகளால் தமது உயிர்களை, உறவுகளை, வாழ்விடங்களை, சொத்துச் சுகங்கள், தொழில்கள் என்று பலவற்றை இழந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். தமிழர்கள் மீது காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டு மக்களிடம் பகைமை விதைக்கப்பட்டது. இது ஏன் நிகழ்ந்தது ? அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறிக்காது பேணி நடந்திருந்தால் இனவாதம் இந் நாட்டில் ஏற்பட்டிருக்காது. பொறுப்பற்ற அரசியல் வாதிகளின் சுயதேவைகளுக்காக குடியுரிமைச் சட்டம், மொழிச் சட்டம் என்பன நிறைவேற்றப்பட்டதன் பலாபலனாகச் சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியிலே இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கைத் தமிழ் மக்களும் இந் நாட்டின் அந்நியர்களாக வேண்டத் தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்பதே உண்மை. இந்நாட்டிற்குத் தேவையற்றவர்கள் அவர்கள் இந்நாட்டின் நலனுக்கு வளத்திற்கு பாதிப்பானவர்கள், சரியாகக் கூறுவதானால் அவர்கள் சிங்கள மக்களுக்கு அந்நியர், எதிரி, ஆக்கிரமிப்பாளர்கள் என்று நம்ப வைக்கப்பட்டது. தற்போதும் அதில் மாற்றம் காணமுடியவில்லை.

தமிழர் உரிமையை அதாவது வாழும் உரிமையை கேட்கும் போது அதை வழங்குவதா, வேண்டாமா, எந்தளவு வழங்குவது என்று கருத்துரைக்கப்படுகின்றது. முதலில் இந் நாட்டின் அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களும் இந் நாட்டின் உரிமையுள்ள குடிமக்கள் தமிழர்கள். அவர்களுக்கும் தம்மைப் போல் சமத்துவமாக வாழும் உரிமை உண்டென்று ஏற்றுக்கொள்ள வேண்டும். தம்மைப் போல் தமிழ் மக்களும் சம உரிமைகளை அனுபவித்து வாழ வழி இருக்க வேண்டும் என்று இனவுறக்குக் கைகொடுக்க வேண்டும். இந்நிலை உருவாவது நாட்டின் தேசிய சக வாழ்வுக்கு, இன நல்லுறவுக்கு இன்றியமையாதது.
இன்று நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு கௌரவிக்கப்படுகின்றதா என்றால் இல்லையென்பதே விடையாகும். அரசியலமைப்பில் தமிழ் மொழியும் தேசிய மற்றும் அரச கரும மொழியாக ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. அரச கரும மொழிகளை நடைமுறையில் செயற்படுத்த அரசியலமைப்புக்கு மேலதிகமாக பல சுற்றுநிருபங்கள், வர்த்தமானிகள், அதிவிசேட வர்த்தமானிகள் என்று பலவும் வெளியிடப்பட்டுள்ளன.

1956 இல் பறிக்கப்பட்ட தமிழ் மொழியின் உரிமை அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தால் மீண்டும் கிடைத்தது. சர்வதேச நாடுகளிலும் நாட்டில் தமிழ் மொழிக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று பறைசாற்றப்படுகின்றது. நடைமுறையை நோக்கும் போது அது வெறும் காகிதக் கட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டதாகவேயுள்ளது. ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருப்பதோ ஈரும் பேனும் என்பது போன்றதே மொழி தொடர்பிலான உண்மை நிலை. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்காது, அவர்களது வாழ்வுரிமையை மறுக்காது நிம்மதியாக வாழவிட்டிருந்தால் தமிழர்கள் தமிழ் மக்கள் உரிமைகேட்டு குரல் கொடுக்க, போராடவேண்டிய தேவை என்ன ? தமிழர்கள் இவ்வாறு உரிமைக் குரல் எழுப்ப வழி செய்தவை என்ன என்பதை வரலாற்றைத் திருப்பிப்பார்த்தால் தெளிவாகப் புலனாகும்.

புதிதாக அரசியலமைப்பில் பௌத்த சமயத்திற்கு முதலிடம், முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. அது ஏற்புடையது. ஆனால், பௌத்த சமயம் என்று பெயர்ப்பலகை மாட்டிப் பயனில்லை. பௌத்த தத்துவங்கள், கோட்பாடுகளுக்கு நாட்டில் முன்னுரிமை கொடுக்கப்படுமா என்பதற்குப் பதில் தேவை. இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனித குல மாண்பிற்கான பௌத்தத்துவக் கோட்பாடுகள் நாட்டிலே கைக் கொள்ளப்படுவது உறுதிப்படுத்தப்படுமானால் அதுவே பொருத்தமாகும். அதை விடுத்துப் பெயரளவில் ஒரு சமயம் முக்கியத்துவம் பெறுவது பொருத்தமில்லை.புதிதாக உருவாக்கப்படும் அல்லது திருத்தப்படும் அரசியலமைப்பில் நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கவர்வதற்காக சமயத்தை முன்னிலைப்படுத்துவதும் மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவதுமே முக்கியத்துவம் பெறப்போகின்றது. அதுவே காணப்படும் கள நிலையாகும். நாட்டின் உண்மை நிலையை, தேவைகளை, கௌரவத்தைப் பேணும் வழிமுறையை அறிந்து சிந்திக்க வேண்டும்.

கடந்த எழுபது ஆண்டுகளாக இந்நாட்டை ஆளும் மூன்று அரசியலமைப்புகளும் நாட்டு மக்கள் மத்தியிலே இன, மத, மொழி உரிமைகளைப் பேணி தேசிய சக வாழ்வையும், நல்லுறவையும் பேணுவதில் தோல்வி கண்டுவிட்டன என்று நோக்கும் நிலையில் நாட்டிற்குப் பொருத்தமான பிளவுபட்டு பல நாடுகளாக சுதந்திரமாகச் செயற்பட்ட இத்தீவில் ஐரோப்பியரால் குறிப்பாக பிரித்தானியர்களால் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக சுதேசிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இந்நாட்டை இலங்கையைத் தொடர்ந்து பிளவற்ற, பிரிவினையற்ற, பிரச்சினையற்ற நாடாகத் திகழச் செய்ய வேண்டுமானால், சர்வதேச விசாரணைகளுக்காளாகாது இருக்க வேண்டுமானால் அதற்கான வழிகாண்பது பெரும்பான்மையினரின் பொறுப்பு. கடமையும் கூட.காலத்துக்குக் காலம் அரசியலமைப்பை தமது நோக்கத்திற்காக மாற்றுவதை விட கடந்த காலங்களில் இன விரிசல்களுக்கு வித்திட்ட செயல்களை மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே நாகரிகமாகும்.
thinakkural.lk 11 07 17

Published in Tamil
04 07 2017

குழப்பங்களுக்கு காரணம் யார்?

-ஹரிகரன்

கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­படக் கூடிய பிள­வுகள், இரா.சம்­பந்­தனின் எதிர்க்கட்சித் தலைவர் பத­விக்கும் கூட ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.அத்­த­கை­ய­தொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாறும் நிலையும் ஏற்­ப­டலாம். அது, கொழும்பின் தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும், அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நாடு­க­ளுக்கும் பேரி­டி­யாக அமையும்

வடக்கு மாகா­ண­ச­பையில் அண்­மையில் குழப்­பங்கள் ஏற்­பட்ட போது, அதனைத் தீர்த்து வைப்­பதில் இந்­தியா, அமெ­ரிக்கா, மற்றும் மேற்கு­லக தூது­வர்­களும் ஆர்வம் காட்­டி­ய­தாக தக­வல்கள் வெளி­யா­கின.இந்த விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­யிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்­ப­டு­கி­றது.அதற்குக் காரணம், இந்தக் குழப்­பங்கள் இலங்­கையின் தேசிய அர­சி­ய­லிலும் பிராந்­திய அர­சி­ய­லிலும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தக் கூடும் என்ற அச்சம் அவர்­க­ளிடம் காணப்­பட்­டது.மேற்­கு­லக மற்றும் இந்­திய ஆசீர்­வா­தத்­துடன் கொழும்பில் நிகழ்த்­தப்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் அனு­கூ­லங்­களை இந்தக் குழப்பம், கெடுத்து விடக் கூடும் என்றும் அவர்கள் கரு­தினர்.அதனால் தான், இரா.சம்­பந்தன் தலை­யிட்டு இந்தக் குழப்­பங்­களை தீர்க்க வேண்டும் என்று அவர்­களால் வலி­யு­றுத்­தப்­பட்­ட­தா­கவும், நம்பப்­ப­டு­கி­றது.இந்த நிலையில், வடக்கு மாகா­ண­ச­பையில் அண்­மையில் ஏற்­பட்ட அர­சியல் குழப்­பங்­க­ளுக்கு இந்­தி­யாவே பின்­னணிக் காரணம் என்று சிலர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தனர் என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

தொலைக்­காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்­றி­ருந்த அர­ச­றி­வியல் துறை விரி­வு­ரை­யாளர் ஒருவர், இந்­தி­யாவின் தேவைக்கேற்பவே, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்­று­வ­தற்கு தமிழரசுக் கட்­சி­யினர் முயற்­சிப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.இது­போன்ற குற்­றச்­சாட்டு பல­ராலும் கூறப்­ப­டு­கி­றது. இந்­தியா மீது மாத்­தி­ர­மன்றி, வெளி­நா­டுகள் என்று பொது­வா­கவும் சிலரால் குற்றச்சாட்­டுகள் கூறப்­ப­டு­கின்­றன.

நீண்­ட­கா­ல­மா­கவே இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் தலை­யீ­டுகள் இருந்து வந்­தி­ருக்­கின்­றன. பிராந்­திய வல்­ல­ர­சான இந்­தியா எப்போ­துமே இலங்­கையை தமது கைப்­பொம்­மை­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவே முயற்­சித்து வந்­துள்­ளது.எனவே வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை பத­வியில் இருந்து அகற்றும் விவ­கா­ரத்தில் இந்­தியா தொடர்­பு­பட்­டி­ருக்­காது என்று யாராலும் உறு­தி­யாகக் கூற முடி­யாது. அதற்­கான வாய்ப்­பு­களை நிரா­க­ரிக்­கவும் முடி­யாது.அதே­வேளை, இந்­தியா அல்­லது வெளி­நா­டுகள் என்று கூறப்­படும் மேற்­கு­லகம் மீது இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­தற்கு முன்னர், அதற்குப் போதிய சான்­று­க­ளையும் முன்­வைப்­பது அவ­சியம். எழுந்­த­மா­ன­மாக குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­பது அபத்தமானது. அதை­விட ஆபத்­தா­னதும் கூட.ஏனென்றால் வடக்கு மாகா­ண­ச­பையின் உரு­வாக்கம் மற்றும் அதன் செயற்­பா­டு­களில் இந்­தி­யாவும் ஏனைய மேற்­கு­லக நாடு­களும் கணிச­மான பங்­க­ளிப்பை செய்து வந்­தி­ருக்­கின்­றன என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது.

1987ஆம் ஆண்டு கையெ­ழுத்­தி­டப்­பட்ட இந்­திய- இலங்கை அமைதி உடன்­பாட்டின் மூலம் தான் இலங்­கைக்கு மாகா­ண­சபை முறை அறிமு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.2013ஆம் ஆண்டு வடக்கு மாகா­ண­ச­பைக்குத் தேர்தல் நடத்­தப்­பட்­டதும் கூட இந்­தி­யாவின் நெருக்­கு­தலின் பேரில் தான் என்­பதை மறந்து விட முடி­யாது.அதற்குப் பின்னர், மாகா­ண­ச­பைக்­கான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்து, வடக்கு மாகா­ண­ச­பையைச் செயற்படவைப்பதில் இந்­தியா கணி­ச­மான பங்கை ஆற்­றி­யி­ருந்­தது.அவ்­வா­றான இந்­தி­யா­வுக்கு வடக்கு மாகா­ண­சபை விவ­கா­ரத்தில் ஒரு­போதும் ஈடு­பாடு இருந்­தி­ருக்­காது என்று யாரும் இல­கு­வாக நம்பிவிடப் போவ­தில்லை.இருந்­தாலும் வடக்கு மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­களில் இந்­தியா தலை­யீடு செய்­வ­தற்கு சாத்­தி­யங்கள் உள்­ளதா- அதற்­கான காரணங்கள் என்­ன­வாக இருக்கும் என்­பது ஆரா­யப்­பட வேண்­டிய விட­யங்­க­ளாகும்.இந்­தி­யாவின் கடந்த கால சில செயற்­பா­டு­களால், எப்­போ­துமே வடக்கில் உள்ள தமிழ் மக்­களில் அநே­க­மா­னோ­ருக்கு இந்­தியா பற்­றிய ஒரு வேறு­பட்ட மனோ­நிலை இருப்­பது உண்மை. அதனை வெளிப்­ப­டை­யாகச் சொல்­வ­தானால், இந்­தியா பற்­றிய அச்சம் என்று கூடக் கூறலாம்.

இலங்­கையில் ஆயு­தப்­போ­ராட்டம் முளை­விட்ட போது இந்­தியா அதனைத் தமக்குச் சார்­பான நிலை­யாக மாற்றிக் கொள்­வ­தற்­காகத் தலை­யிட்­டது.ஆயு­தங்­க­ளையும் பயற்­சி­க­ளையும் கொடுத்து தமிழ்ப் போராளி அமைப்­பு­களை அர­வ­ணைத்­தது. அது, கொழும்பைத் தனது பிடிக்குள் வைத்­தி­ருப்­ப­தற்­காக இந்­தியா மேற்­கொண்ட நகர்வே தவிர, தமிழ் மக்­களின் மீது இந்­தி­யா­வுக்கு இருந்த அக்­கறை என்று எடுத்துக் கொள்ள முடி­யாது.எனினும், இந்­தி­யாவின் பிடியில் விடு­தலைப் புலிகள் இயக்கம் சிக்கிக் கொள்­ள­வில்லை.
இலங்­கையில் நிலை­கொண்­டி­ருந்த இந்­தி­யப்­ப­டைகள் தோல்­வி­யுடன் திரும்பிச் செல்­வ­தற்கும் புலிகள் கார­ணி­யாக இருந்­தனர். ராஜீவ்­காந்தி கொலையும் இந்­தி­யா­வுக்கு கசப்­பான அனு­ப­வத்தைக் கொடுத்­தி­ருந்­தது.அதனால், இந்­தியா ஒவ்­வொரு கட்­டத்­திலும் தலை­யீ­டு­களைச் செய்ய முனைந்­தது. விடு­தலைப் புலி­களின் உயர்­மட்டம் வரைக்கும் இந்தி­யாவின் ஊடு­ருவல் இருந்­தது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி புலி­களின் தலைவர் பிர­பா­க­ரன் கொல்­லப்­படும் வரையில் இந்­தியா மறை­மு­க­மாகத் தலையிட்டுக் கொண்­டி­ருந்­தது.இவ்­வாறு ஒவ்­வொரு கட்­டத்­திலும், இந்­தியா தலை­யீ­டு­களைச் செய்து, பல சம­யங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு வேண்­டாத விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­தா­னது இந்­தியா மீதான இந்த அச்­சத்­துக்கு காரணம்.எதை­யெ­டுத்­தாலும் றோ என்று கூறு­வது, யார் மீது சந்­தேகம் வந்­தாலும் றோவின் ஆள் என்று விழிப்­பது வடக்கில் உள்ள பல­ருக்கும் ஒரு நோயா­கவே மாறி விட்­டது. இது சிஐ­ஏக்கும் பொருத்தக் கூடி­யது தான், இவ்­வா­றான பட்­டப்­பெ­யர்­க­ளுடன் வடக்கு கிழக்கில் பலர் உலா­வு­கின்­றனர்.அவர்கள் உண்­மை­யி­லேயே அப்­ப­டிப்­பட்­ட­வர்­களா- என்­பது யாருக்கும் தெரி­யாது. பெரும்­பாலும் றோ அல்­லது சிஐஏ தமக்­கான புலனாய்வா­ளர்­க­ளாக இப்­படி அறி­யப்­பட்­ட­வர்­களை வைத்­தி­ருக்க விரும்­பாது என்று மட்டும் துணிந்து கூறலாம்.எப்­போதும் புல­னாய்வு அமைப்­புகள் தமது முக­வர்­களை அடை­யாளம் காட்­டு­வதோ அவர்கள் அடை­யாளம் காட்­டப்­ப­டு­வ­தையோ விரும்பாது.

உள்­நாட்டுப் புல­னாய்­வா­ளர்­களை எல்லாம் சிஐடி என்று பொது­வாகச் சொல்லும் பழக்கம் நம்­மி­டையே இருப்­பது போலத் தான், வெளிநாட்டுத் தொடர்பு இருக்­கலாம் என்று சந்­தே­கிப்­ப­வர்­க­ளையும், றோ அல்­லது சிஐஏ என்று விழிக்கும் பழக்கம் வடக்கில் இருக்­கி­றது.இத்­த­கைய மனோ­பா­வத்தில் இருந்து தான் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில் இந்­தியா மற்றும் மேற்­கு­லகம் பற்­றிய சந்தேகங்கள் எழுந்­தி­ருக்கக் கூடும்.வடக்கில் தமிழ்த் தேசி­ய­வா­தத்­துக்கு முத­ல­மைச்சர் தலைமை தாங்க முற்­ப­டு­வதை இந்­தியா ஏற்றுக் கொள்­ள­வில்லை என்றும் அதனால் தான் அவரை முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து நீக்க இந்­தியா முற்­ப­டு­வ­தா­கவும், ஒரு வாதம் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.இலங்­கையில் தமிழ்த் தேசி­ய­வாதம் பலம் பெறு­வ­தையோ, தனி­நாட்டுக் கோரிக்கை வலுப்­பெ­று­வ­தையோ இந்­தியா ஒரு­போதும் விரும்­பாது என்­பது உண்­மையே.அதனை தனது நாட்­டுக்­கான அச்­சு­றுத்­த­லா­கவும் இந்­தியா பார்க்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அதை­விட. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்­போ­தைய தலை­மைத்­துவம் இந்­தி­யாவின் கருத்­துக்­க­ளுக்குச் செவி­சாய்க்­கத்­தக்க ஒன்­றாக இருக்­கி­றது என்­பதும் உண்­மையே.

ஆனால், முத­ல­மைச்சர் விக­னேஸ்­வ­ர­னையும் அத்­த­கைய ஒரு­வ­ராக மாற்­று­வ­தற்கு இந்­தியா முனைந்­தி­ருக்­குமே தவிர, அவரை இந்தக் களத்தில் இருந்து அகற்­று­வதை புத்­தி­சா­லித்­த­ன­மான நகர்­வாக கரு­தாது.விடு­தலைப் புலிகள் இயக்கம் பலம்­பெற்ற போது, அதன் தலை­மையை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கவே இந்­தியா விரும்­பி­யது, அது முடி­யாமல் போன கட்­டத்தில் தான், அதனை அழிப்­ப­தற்கு இந்­தியா கங்­கணம் கட்­டி­யது.அது­போ­லவே, விக்­னேஸ்­வரன் போன்ற பல­மான ஒரு தலைவர் எழுச்சி பெறும் போது அவரைத் தனது பக்கம் இழுப்­ப­தற்கே இந்­தியா முயன்­றி­ருக்கும்.அவ்­வாறு இந்­தியா முயன்­ற­தா­கவோ, அதற்கு விக்­னேஸ்­வரன் இணங்­காமல் போன­தா­கவோ எந்த தக­வலும் இல்­லாத நிலையில், அவரை அகற்­று­வதில் இந்­தியா அக்­கறை செலுத்­து­வ­தாக முன்­வைக்­கப்­படும் வாதங்­களின் உண்­மைத்­தன்மை கேள்­விக்­குள்­ளா­கி­றது.தற்­போ­தைய சூழலில் விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து வெளி­யேற்­று­வதால் மாத்­திரம் அவரை தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் இருந்து அகற்றி விட முடியும் என்று இந்­தியா கணக்குப் போட்­டி­ருக்கும் என்று, எவ­ரேனும் இந்­தி­யாவை குறைத்து மதிப்­பிடக் கூடாது.அத்­த­கைய நகர்வு விக்­னேஸ்­வ­ரனை இன்னும் பலப்­ப­டுத்தும் என்­பதை மாத்­தி­ர­மன்றி, அது தொட­ரான பல விளை­வு­க­ளுக்கும் காரணமாக அமையும் என்­பதை இந்­தி­யாவோ அல்­லது வேறு எந்த நாடோ சுல­ப­மா­கவே கணிப்­பிட்­டி­ருக்கும்.

தற்­போ­தைய அர­சாங்கம் இந்­தி­யா­வுக்கும் மேற்­கு­ல­கிற்கும் சாத­க­மா­னது. அதனைப் பாது­காப்­பது அவர்­க­ளுக்கு முக்­கி­ய­மா­னது.வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­படக் கூடிய பிள­வுகள், இரா.சம்­பந்­தனின் எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கும், கூட ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.அத்­த­கை­ய­தொரு நிலையில் மஹிந்த ராஜபக் ஷள எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாறும் நிலையும் ஏற்­ப­டலாம். அது,. கொழும்பின் தற்­போதைய அர­சாங்­கத்­துக்கும், அதனைத் தாங்கிப் பிடித்துக் கொண்­டி­ருக்கும் நாடு­க­ளுக்கும் பேரி­டி­யாக அமையும்.இதனை இந்­தி­யாவோ மேற்­கு­லக நாடு­களோ கணித்­தி­ருக்­காது என்று எவ­ரேனும் கரு­தினால் அது அப்­பா­வித்­த­ன­மா­னது.முத­ல­மைச்சர் பத­வியில் இருந்து விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்­று­வ­தென்­பது உள்­ளக அல்­லது வெளி­யக நிகழ்ச்சி நிர­லாக இருக்­கலாம். ஆனாலும் அது, இந்­தியா போன்ற நாடு­களின் விருப்­பத்தை பூர்த்தி செய்­வ­தற்­கான நகர்­வாக இருக்­குமா என்­பது சந்­தேகம்.ஏனென்றால், இதனை விட வேறு வழி­களில் முத­ல­மைச்­சரை தனது கைக்குள் வைத்­தி­ருப்­ப­தையே இந்­தியா போன்ற நாடுகள் பாது­காப்­பா­ன­தாக கருதும்.

கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேறும், தமிழர் தரப்பில் பிளவு காணப்படுகிறது. எனவே ஒற்றுமை முக்கியமானது” என்று திரும்பத் திரும்பக் கூறியிருந்தார்.இந்தநிலையில், இந்தியா அல்லது மேற்குலகம் தொடர்பாக, நம்பகம் இல்லாத சான்றுகள் இல்லாத வெறும் அனுமானங்களின் அடிப்படையில் செயலாற்ற முனைந்தால், அதன் பாதகமான விளைவுகளையும் தமிழ் மக்களே எதிர்கொள்ள நேரிடும்.இந்தியாவும், மேற்குலகமும், தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதில் முக்கியமான சக்திகள். இந்த இரண்டையும் புறமொதுக்கி விட்டு தீர்வு ஒன்றை நோக்கி நகர முடியாது.இந்தநிலையில் அற்ப அரசியல் நலன்களுக்காக உலக வல்லரசுகளை பகைத்துக் கொள்ளுகின்ற நிலைக்குத் தமிழர்களை தள்ளிச் செல்வது புத்திசாலித்தனமான நகர்வாக இருக்காது.
-ஹரிகரன் ilakkiyainfo.com 28 06 2017

Published in Tamil