26 10 2018

சிதைக்கப்படும் தமிழரின் பலம்

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் நடத்த வருபவர்களும், அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களும், தமிழ் மக்களின் இன்றைய அடிப்படைத் தேவையைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகமே இப்போது ஏற்படுகிறது.வடக்கில் புதிது புதிதாக உருவெடுக்கும் கட்சிகள்தான், இந்தச் சந்தேகம் எழுவதற்குக் காரணம். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் இன்றைய முக்கியமான அரசியல் ரீதியான தேவை, உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதும், நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதும் தான்.தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையானதும் நிரந்தரமானதும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்று எட்டப்பட்டு விட்டால், இன்றுள்ள எல்லாத் தமிழ்க் கட்சிகளுமே, காலாவதியாகி விடும் என்று தான் தோன்றுகிறது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற, உரிமைகளை வென்றெடுப்பதற்கான இலக்குகளை முன்னிறுத்தியே, பெரும்பாலான கட்சிகள் இயங்குகின்றன. தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட்டு விட்டால், இந்தக் கட்சிகள் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகவே, மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கப் போவது, உறுதியான பின்னர், இந்திய தேசிய காங்கிரஸைக் கலைத்து விடவே காந்தி விரும்பினார். ஆனால், அவருடன் கூட இருந்த ஜவஹர்லால் நேரு, இந்திய தேசிய காங்கிரஸை அரசியல் கட்சியாக வைத்திருக்க விரும்பினார். அதை வைத்து, அவர்கள் அரசியல் செய்தனர்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக உருவாக்கப்பட்ட காங்கிரஸ், சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும், எப்படி ஒரு கட்சியாக நிலைத்திருக்கிறதோ அதுபோன்றே, தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வு ஒன்று கிடைத்த பின்னரும், தமிழ்க் கட்சிகள் இயங்கக்கூடாது என்றில்லை. ஆனால், அவை தமது இலட்சியத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.எனினும், அப்படியான நிலை தமிழ்க் கட்சிகளுக்கு வந்து விடும் போலத் தெரியவில்லை. ஏனென்றால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கும், வாய்ப்போ சூழலோ, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, அரசியல் செய்து வரும் கட்சிகள், தாராளமாகவே தமது நீண்டகாலப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

1980களின் தொடக்கத்தில், தமிழீழக் கோரிக்கைகளை முன்வைத்து, எப்படி புற்றீசல்களைப் போன்று ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றினவோ, அதுபோலத் தான், 2009 இற்குப் பிந்திய அரசியல் சூழலில், புதிது புதிதாகக் கட்சிகளும் கூட்டமைப்புகளும் உருவாகி வருகின்றன.ஆயுதமேந்திப் போராடும் கடுமையான முயற்சிகளில் பல இயக்கங்கள் ஈடுபட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவ்வாறான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், வெறுமனே நான்கைந்து சுவர்களின்மேல், சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுத் தம்மையும் ‘இயக்கம்’ என்று கூறித் திரிந்தவர்களே, அப்போது அதிகமாக இருந்தார்கள்.அவர்கள் எல்லோருமே, 1986 இற்குப் பின்னர், போன இடம் தெரியவில்லை. அவர்களின் இயக்கங்களுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியாது.

கிட்டத்தட்ட அதேபாணியில் தான், ‘நாங்களும் அரசியல் செய்ய வருகிறோம்; அரசியல் கட்சிகளை உருவாக்குகிறோம்’ என்று பலர் கிளம்பி இருக்கிறார்கள்.தமிழ் மக்களின் தேவைகள் என்ன, அதை அடைவதற்கான வழிகள் என்ன? போன்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் போலத்தான் தெரிகிறது.வடக்கு மாகாண அமைச்சராக இருந்த அனந்தி சசிதரன், கடந்தவாரம், ‘ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.ஏற்கெனவே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.நவரத்தினம் 1969இல் ஆரம்பித்த, தமிழர் சுயாட்சிக் கழகத்தைப் பின்பற்றியே, இந்தக் கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.அப்போது, ஐ.தே.க அரசாங்கத்துடன் இணைந்து, அடையாள அட்டை சட்டமூலத்துக்கு ஆதரவாக, தமிழரசுக் கட்சி வாக்களித்திருந்தது. வி.நவரத்தினம் அதை எதிர்த்து வாக்களித்தார். அதனால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னரே, அவர் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்தார்.

அதேவழியில்தான், தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு, அந்தக் கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த அனந்தியும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார். ஏற்கெனவே, தமிழரசுக் கட்சியில் இருந்து அதிருப்தி கொண்டவர்கள் சிலர், அதிலிருந்து வெளியேறி, ‘ஜனநாயகத் தமிழரசுக் கட்சி’ என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களையும் வெளியேற விரும்புபவர்களையும் ஒருங்கிணைத்துச் செயற்படுவதற்காக, புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாக, காரணமொன்றை அனந்தி முன்வைத்திருக்கிறார்.

2013 மாகாணசபைத் தேர்தலில், 87 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த அவர், தனக்குப் பின்னால், மிகப்பெரியதோர் அரசியல் பலம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.ஆனாலும், அவரது கட்சியின் ஆரம்ப நிகழ்வில், 50 பேர் கூடப் பங்கேற்காமல் போனது தான் துயரம். அனந்தியை உசுப்பேற்றி விட்டு, அவரைப் புதிய கட்சியை ஆரம்பிக்கத் தூண்டிய அரசியல்வாதிகள் பலரும் கூட, அந்த நிகழ்வுக்கு வரவில்லை. இதுதான் அரசியல் என்பதை, அவர் புரிந்து கொள்ள நீண்ட காலம் செல்லும்.தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான வி.நவரத்தினத்துக்கே ‘அந்த அரசியல்’ புரியாத போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வந்த அனந்தி போன்றவர்களுக்கு, அந்த அரசியலைப் புரிந்து கொள்ள இன்னும் காலம் தேவை. இதுபோல இன்னும் பலர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் இலக்குகளுடன் கட்சிகளை உருவாக்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவராக, வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இடம்பெற்றிருக்கிறார்.அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு கட்சியை, உருவாக்கும் நோக்கில், தனது கட்சிக்குத் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்று பெயரிட்டிருக்கிறார்.

இதனால் தமிழ் அரசியல் பரப்பில், கட்சிகள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றவே தவிர, தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும், பணிகளை யாரும் முன்னெடுக்கும் நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.இன்றைய நிலையில் கட்சிகளோ சின்னங்களோ தமிழ் மக்களுக்கு அவசியமோ முக்கியமோ அல்ல. எல்லாத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளினதும் கொள்கை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பது தான்; சமஸ்டித் தீர்வை மய்யப்படுத்தியது தான்.ஆனாலும், கல்லில் நார் உரிக்கின்ற அந்த முயற்சியைச் சாத்தியப்படுத்துவதற்காக, தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தும், பணிகளை, எந்த அரசியல் கட்சியுமே முன்னெடுக்கவில்லை. வெறும் அறிக்கை அரசியலுக்குள் தான், இன்னமும் உழன்று கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களுக்காக, சில ஆயிரம் பேரைக் கூட, அணி திரட்ட முடியாத வங்குரோத்து நிலையில் தான், தமிழ்க் கட்சிகள் எல்லாமே இருக்கின்றன. இப்படியான நிலையில், புற்றீசல்களைப் போல புதிதாக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பெருகுவது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகத் தெரியவில்லை.தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமது கொள்கையின் வழி நடப்பதாகக் கூற முடியாது. அதற்காக, எல்லாக் கட்சிகளுமே, உதவாதவை என்று ஒதுக்கி விடவும் முடியாது. புதிய கட்சிகளை ஆரம்பிப்பதால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்று விடலாம் என்ற கற்பனை ஆபத்தானது. அது, கட்சிகளைப் பெருக்குமே தவிர, தமிழ்த் தேசிய அரசியலின் பலத்தைச் சிதைத்து விடும்.ஏற்கெனவே தமிழ்க் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, பேரினவாதக் கட்சிகள் வடக்கில் தலையெடுக்கத் தொடங்கி விட்டன. மேலும் மேலும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பிளவுபடும் போதும், பிரிந்து செல்லும் போதும், இந்த நிலை இன்னும் மோசமாகும். இது ஒரு கட்டத்தில் பேரினவாதக் கட்சிகளே வடக்கு மாகாணசபையை பங்கு போட்டுக் கொள்ளும் நிலைக்கும் வித்திடலாம்.

அரசியல் ரீதியாப் பொது இலக்கில் ஒன்றுபட்டுச் செயற்படத் தமிழ்த் தலைமைகளும், அரசியல்வாதிகளும் முன்வராத போது, அவரவர் தமது கொள்கையை முன்னிறுத்திக் கட்சிகளைத் தொடங்கிக் கொண்டிருக்கும் போது, தமிழ்த் தேசிய பலம் சிதைந்து கொண்டே செல்லும். அதுதான் வரும் நாள்களில் நடக்கப் போகிறதேயன்றி, புதிய கட்சிகளின் பெருக்கம், தமிழ் மக்களுக்கான அரசியல் அடையாளங்களையும் உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் தென்படவில்லை.

இந்தத் தருணத்தில், “தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்ற தந்தை செல்வாவின் கருத்தே, நினைவுக்கு வருகிறது. tamilmirror.lk 26 10 2018

Published in Tamil

11 10 2018

விக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றிய மிகை­யான, பொய்­யான புர­ளி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வதும், நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும் ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும், வழக்­க­மான போக்­கா­கவே இருந்து வந்­துள்­ளது

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ் ஊடகப் பரப்பில் மாத்­தி­ர­மன்றி இப்­போது சிங்­கள, ஆங்­கில ஊடகப் பரப்­பிலும் அதி­க­ளவில் உலாவும் ஒரு­வ­ராக மாறி­யி­ருக்­கிறார்.வடக்கில் இரா­ணுவ இருப்­புக்கு எதி­ரான அவ­ரது நிலைப்­பா­டுகள், சமஷ்டி தொடர்­பான அவ­ரது கருத்­துகள் என்­பன முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை எதிர்­ம­றை­யான கோணத்தில் காட்­டு­வதில் சிங்­கள ஊட­கங்கள் அதிக கவனம் செலுத்தி வந்­தன.வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வுக்கு வர இன்னும் 25 நாட்கள் வரையே இருக்­கின்ற நிலையில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் அடுத்­த­கட்ட அர­சியல் பயணம் பற்­றிய செய்­திகள், விவா­தங்­க­ளுக்கு சிங்­கள, ஆங்­கில ஊட­கங்கள் இப்­போது, அதிக முக்­கி­யத்­து­வத்தை கொடுக்க ஆரம்­பித்­துள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றிய மிகை­யான, பொய்­யான புர­ளி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வதும், நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும் ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும், வழக்­க­மான போக்­கா­கவே இருந்து வந்­துள்­ளது.இத்­த­கைய பின்­னணிச் சூழலில் இருந்து பார்க்கும் போது, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு சிங்­கள ஊடகப் பரப்பில் அதி­க­ரித்­துள்ள முக்­கி­யத்­து­வத்தை புரிந்து கொள்­வது கடி­ன­மல்ல. அதா­வது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பிள­வு­ப­டுத்தி, பல­வீ­னப்­ப­டுத்தும் வாய்ப்­புள்­ள­வ­ராக அவரை அடை­யாளம் கண்­டுள்ள சிங்­கள ஊட­கங்கள், அதனைச் சார்ந்த செய்­தி­களை வெளிப்­ப­டுத்­து­வதில் அக்­கறை கொண்­டுள்­ளன போலும்.

அண்­மையில் ஒரு சிங்­கள இதழில் வெளி­யான செய்­தியை ஆங்­கில ஊடகம் ஒன்று வெளி­யிட்­டி­ருந்­தது. அடுத்த மாதம் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் புதிய கட்­சியை-, கூட்­ட­ணியை அறி­விக்கப் போகிறார் என்­பதே அந்தச் செய்­தியின் சுருக்கம்.அவ­ருடன், ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸும் கூட்டுச் சேரப் போவ­தா­கவும், அந்தச் செய்­தியில் கூறப்­பட்­டி­ருந்­தது.இந்த இரண்டு கட்­சி­களும், அவற்றின் தலை­வர்­களும் கீரியும் பாம்­பு­மா­கவே இருக்­கி­றார்கள். இற்றை வரைக்கும் அவர்­க­ளுக்குள் இணங்கிப் போவ­தற்­கான எந்த சமிக்­ஞை­களும் இல்லை என்­பது தான் உண்மை. அதனை சில­வே­ளை­களில் குறித்த சிங்­கள ஊடகம் அறி­யாமல் இருந்­தி­ருக்­கலாம்.அது­போக, இன்­னொரு சிங்­கள ஊட­கத்­துக்கு ஆனந்­த­சங்­கரி ஒரு செவ்­வியைக் கொடுத்­தி­ருந்தார். அதில் அவர், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அர­சி­ய­லுக்குப் பொருத்­த­மா­ன­வ­ரில்லை,அவர் தமிழ் மக்­க­ளுக்கு எதை­யா­வது செய்ய விரும்­பினால் வேறே­தா­வது வழியில் முயற்­சிக்க வேண்டும்” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் முன்­வந்தால், அவ­ருக்கு தமது கட்­சி­யான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைமைப் பத­வியைத் தந்து விடத் தயா­ராக இருக்­கிறேன் என்று சில காலத்­துக்கு முன்னர் கூறிய ஆனந்­த­சங்­கரி தான் இப்­போது, அவ­ருக்கு அர­சியல் சரிப்­பட்டு வராது என்று கூறி­யி­ருக்­கிறார்.அவர் இப்­படிக் கூறு­வது புதி­தான விட­ய­மல்ல தான்.என்­றாலும்,விக்­னேஸ்­வ­ரனின் கூட்­ட­ணியில், ஆனந்­த­சங்­க­ரியின் கட்­சியும் இடம்­பெறப் போகி­றது என்று ஒரு சிங்­கள ஊட­கமும், அவ­ருக்கு அர­சியல் சரிப்­பட்டு வராது என்று அதே ஆனந்­த­சங்­கரி கூறி­யதை இன்­னொரு சிங்­கள ஊட­கமும் சம­கா­லத்தில் செய்­தி­யாக்­கி­யி­ருந்­தமை தான் ஆச்­ச­ரி­ய­மா­னது.

கிட்­டத்­தட்ட இதே முரண்­பட்ட கருத்துச் சூழல் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் இருந்தும் வெளிப்­பட்டுக் கொண்டு தான் இருக்­கி­றது.ஓரிரு வாரங்­க­ளுக்கு முன்னர் ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில், 2009இல் ஏற்­றுக்­கொண்ட வகி­பாகம் மற்றும் அணு­கு­மு­றையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தோல்வி கண்டு விட்­டது என்று கூறி­யி­ருந்த முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், கடந்­த­வாரம், அதே கூட்­ட­மைப்பில் போட்­டி­யிடத் தயார் என்றும் கூறி­யி­ருக்­கிறார். (8ஆம் பக்கம் பார்க்க)

விக்கினேஸ்வரனும்…. (தொடர்ச்சி)

அதற்­காக அவர் சில நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கிறார் என்­பது வேறு விடயம்.கூட்­ட­மைப்பை ஒரு அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்து, கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்தில் மாற்றம் செய்­யப்­பட்டால், மீண்டும் கூட்­ட­மைப்பில் போட்­டி­யி­டலாம் என்ற வகையில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.கூட்­ட­மைப்பை பதிவு செய்­வதோ, கூட்­ட­மைப்பு தலை­மைத்­து­வத்தில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­வதோ நடக்­கக்­கூ­டிய காரி­ய­மன்று. இது அவ­ருக்குத் தெரிந்­ததால் தான் அப்­படிக் கூறி­னாரோ தெரி­ய­வில்லை.எது­எவ்­வா­றா­யினும், தோல்­வி­ய­டைந்து விட்­ட­தாக அவரே அறி­வித்து விட்ட கூட்­ட­மைப்பில் மீண்டும் போட்­டி­யிட இணங்­கு­வது என்­பது அவ­ருக்கு தலை­கு­னி­வான விடயம் தான்.முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட விரும்­பு­கி­றாரோ இல்­லையோ தெரி­ய­வில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யாக தமி­ழ­ரசுக் கட்சி அவரை நிறுத்தத் தயா­ராக இல்லை என்­பது மட்டும் தெளி­வாகத் தெரி­கி­றது.

விக்­னேஸ்­வரன் வெளி­யே­று­வது, கூட்­ட­மைப்பைப் பல­வீ­னப்­ப­டுத்தும் என்று புளொட் கரு­தி­னாலும், விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பின்னால் ரெலோவின் ஒரு குறிப்­பிட்ட சிலர் சென்று விடக் கூடும் என்ற கருத்­துக்கள் காணப்­பட்­டாலும், தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் அவ­ருக்கு எதி­ரான நிலை வலுப்­பெற்று விட்­டது.அண்­மைக்­கா­லத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றியும், அதன் தலை­மைத்­துவம் பற்­றியும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வெளி­யிட்ட கருத்து, அவரைத் தொடர்ந்து கூட்­ட­மைப்­புக்குள் ஒட்ட வைத்­தி­ருப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளையும் கூட சலிப்­ப­டைய வைத்து விட்­டது.விக்­னேஸ்­வரன் இல்­லாமல் மாகா­ண­சபைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்சி தயா­ராகி விட்­டது.விக்­னேஸ்­வ­ர­னுக்கும், கூட்­ட­மைப்புத் தலை­மைக்கும் இடை­யி­லான ஆகப் பிந்­திய விரிசல் தீவி­ர­ம­டைந்த பின்னர், சம்­பந்­த­னுக்கும், விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் சந்­திப்பு நடக்கப் போவ­தாக பர­வ­லான செய்­திகள் வெளி­யா­கின. அது­பற்­றிய எதிர்­பார்ப்­பு­களும் பல­மாக காணப்­பட்­டன.

வேண்டா வெறுப்­பாக அத்­த­கைய சந்­திப்­புக்­கான வாய்ப்­புகள் கோரப்­பட்ட போதும், அதற்­கான சூழல் உரு­வா­க­வில்லை.தமக்கும் சம்­பந்­த­னுக்கும் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, கூட்­ட­மைப்பின் தலைமை மீது முத­ல­மைச்சர் பழியைப் போட்டுக் கொண்­டி­ருந்­தது சம்­பந்­த­னுக்குப் பிடிக்­காமல் போயி­ருக்­கலாம்.அவரும் கூட, தன்னை விக்­னேஸ்­வரன் சந்­திக்க விரும்­பினால் எப்­போதும் சந்­திக்­கலாம் என்று கூறி விட்டு, அதற்­கான வாய்ப்பைக் கொடுக்­காமல் நழுவிக் கொண்டு வரு­கிறார்.ஆக, இப்­போ­தைய நிலையில், இரண்டு பேரும் சந்­தித்துக் கொள்­வதை விரும்­ப­வில்லை.. அல்­லது சந்­திக்­காமல் இருப்­பதே நல்­லது என்று அவர்­க­ளுக்குள் ஓர் இணக்கம் உரு­வா­கி­யி­ருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.

வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடிந்த பின்னர், தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடுதல் கவனம் செலுத்தப் போவ­தாக விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார்.அவ­ரது அடுத்­த­கட்ட அர­சி­ய­லுக்­கான தளம் அதுவே என்­பதால், அதன் மீது கவனம் செலுத்­து­வதே அவ­சி­ய­மாக இருக்கும்.எனினும், முத­ல­மைச்சர் பதவி போன பின்னர் தன் மீது வரக் கூடிய குற்­றச்­சாட்­டு­களை சமா­ளிக்க இப்­போதே பாது­காப்பு வியூ­கங்­களை அவர் வகுக்கத் தொடங்கி விட்டார்.வடக்கு மாகாண சபையின் வினைத்­திறன் தொடர்­பாக, தன் மீது சர­மா­ரி­யான குற்­றச்­சாட்­டுகள் வரும் வாய்ப்பு இருப்­பதை உணர்ந்து இப்­போதே- அதி­கா­ரத்தில் இருக்கும் போதே- தர­வு­களைத் திரட்டி ஒரு அறிக்­கையைத் தயார்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார்.வடக்கு மாகாண சபை என்ன செய்­தது என்ற விளக்­கங்­களைக் கொடுப்­பதே அந்த அறிக்கை. அடுத்த கட்ட அர­சியல் பய­ணத்­துக்­கான தடை­களை அகற்­று­வ­தற்கு இந்த அறிக்கை முத­ல­மைச்­ச­ருக்கு முக்­கி­ய­மா­னது.ஏனென்றால், வரும் நாட்­களில், கூட்­ட­மைப்புத் தலைமை கூட, “எல்­லா­வற்­றையும் பார்த்துக் கொள்­ளுங்கள் என்று தான் முத­ல­மைச்­ச­ரிடம் கொடுத்தோம், அதனை அவர் கெடுத்து விட்டார்” என்று, தான் பிர­சாரம் செய்யப் போகி­றது.அதனை எதிர்­கொள்­வ­தற்குத் தான், முத­ல­மைச்­சரும் இத்­த­கைய அறிக்கையை வெளியிடத் தயாராகி வருகிறார். அத்துடன், வடக்கு மாகாணசபையின் தோல்விக்கும், சபையின் ஒரு பகுதி உறுப்பினர்களே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முதலமைச்சர் இப்போதே அழுத்தமாக கூற முற்பட்டிருக்கிறார்.

2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. நீதியரசர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பாரா என்ற வலுவான கேள்வி இருந்தது.முதலமைச்சர் பதவி அவரை விட்டுச் செல்லும் இந்தச் சூழலிலும் கூட இத்தகைய கேள்வி இன்னும் வலுவடைந்திருக்கிறதே தவிர குறையவில்லை.விக்னேஸ்வரன் பற்றிய அரசியல் பார்வைகள் மாற்றமடைந்திருந்தாலும், அவர் மீதான அரசியல் வசீகரத்தன்மை குறைந்து விட்டதாகத் தெரியவில்லை.அந்த வசீகரத் தன்மை எந்தளவுக்கு அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும்.  ilakkiyainfo.com 30 09 2018

Published in Tamil

05 10 2018

ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

தமிழீழத்தின் தலைநகராக புலிகளால் சித்தரிக்கப்பட்ட கிளிநொச்சி, சிங்கள இராணுவத்தால் கடந்த ஜனவரியில் தாக்கி அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் பின்வாங்கி முல்லைத் தீவுக்கு நகர்ந்தார்கள். சிங்கள இராணுவத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் புலிகளோடு முல்லைத் தீவு நோக்கி நெடும்பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இம்மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தால் சிங்கள இராணுவம் தங்கள் மீது பாரிய தாக்குதல் தொடுக்காது என்றும், அதையும் மீறி தாக்குதல் தொடுத்தால், மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக மேலைநாடுகள் தலையிட்டுப் போரை நிறுத்துமாறு சிங்கள அரசை நிர்பந்திக்கும் என்றும் புலிகள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிங்கள இராணுவமோ, கனரக ஆயுதங்களைக் கொண்டும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றொழித்தது. வாயளவில் கண்டனம் தெரிவித்தற்கு மேல் எந்தவொரு மேலை நாடும் சிங்கள அரசை நிர்பந்திக்கவோ, தலையீடு செய்யவோ முன்வரவுமில்லை.எந்த மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக புலிகள் கருதினார்களோ, அந்த மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடிய போர்த் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தக் கையறு நிலையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளால் இதனைத் தடுக்கவும் இயலவில்லை. பின்வாங்கும் பயணம் நீண்டு போகப் போக, புலிகள் தமது ஆயுதக் கிடங்குகளையும் பாதுகாப்பு அரண்களையும் கைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று. எந்த ஆயுதங்களைத் தமது விடுதலைக்கான அச்சாணியாக புலிகள் கருதினார்களோ, அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. சிங்கள இராணுவமோ, நவீன ஆயுதங்களைக் கொண்டு கொடூரத் தாக்குதலை வகைதொகையில்லாமல் கூட்டிக் கொண்டே போனது.
கொரில்லாப் போர் முறையிலிருந்து முன்னேறி, கிரமமான இராணுவத்தையும் வான்படையையும் கட்டியமைத்து வலுவடைந்த புலிகள், பிந்தைய அசாதாரண நிலையை கவனத்தில் கொண்டு, தமது நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், இலட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்கவும் இராணுவ ரீதியில் தமது செயல்தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய தேவை எழுந்த போதிலும் அதனை உதாசீனப்படுத்தினார்கள். கிரமமான படைகளைக் கலைத்துவிட்டு, மீண்டும் தற்காப்பு கொரில்லா போர்முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு புறநிலைமைகள் நிர்பந்தித்த போதிலும், அதை ஏற்க மறுத்தார்கள். மேலைநாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும், இந்தியத் தேர்தல் முடிவுகள் போர்நிறுத்தத்தைக் கொண்டு வரும் என்று குருட்டுத்தனமாக நம்பிப் பேரழிவையும் பின்னடைவையும் சந்தித்துள்ளார்கள்.புலிகள் மட்டுமே தமிழீழத்தின் ஏகபோக பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், புலிகள் இயக்கத் தலைவர்களும் தளபதிகளும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெருந்தோல்வியால், இன்று ஈழ விடுதலைப் போராட்டம் தலைமை ஏதுமின்றித் தத்தளிக்கிறது. புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான பத்மநாபன், தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களால் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இயக்கத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல எவருமே இல்லாத அவலம் நீடிக்கிறது. ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வந்த இதர குழுக்களும் தனிநபர்களும் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு புலிகளால் ஒடுக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை ஏதுமின்றி, ஒரு பாரிய வெற்றிடம் நிலவுகிறது.
இது கசப்பான உண்மை என்ற போதிலும், இத்தகைய பின்னடைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் என்ன? சீனாவும் பாகிஸ்தானும் சிங்கள பாசிச அரசுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஆதரவாக நின்றதும், இந்தியா இந்த இனப்படுகொலைப் போருக்கு இறுதிவரை துணை நின்று வழிநடத்தியதும் தான் காரணமா? அல்லது ஐ.நா. மன்றமும் மேலை நாடுகளும் பாராமுகமாக இருந்ததுதான் காரணமா?
இவையெல்லாம் புறக்காரணிகள்தாம். இத்தகைய நிலைமைகளை எதிர்கொண்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்கதாகச் சித்தரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் மூடத்தனமும் இராணுவ சாகசவாதமும்தான் இப்பேரழிவுக்கும் மீளமுடியாத பின்னடைவுக்கும் பெருந்தோல்விக்கும் முதன்மையான காரணங்கள். புலிகளிடம் சரியான அரசியல் தலைமை இல்லாமை, சரியான இராணுவ உத்திகள் இல்லாமை, யாரையும் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பது என்கிற சந்தர்ப்பவாதம்; அரசியல் நேர்மையற்ற அணுகுமுறை, புலிகள் இயக்கத்துக்குள்ளும் ஜனநாயகமற்ற பாசிச சர்வாதிகாரம் முதலான ஈழ விடுதலைக்கே எதிரான போக்குகளே இப்பேரழிவையும் மீண்டெழ முடியாத தோல்வியையும் தோற்றுவித்துள்ளன.எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் இலட்சியத்தையும் கடமைகளையும் வகுத்துக் கொண்டு, அந்த இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதிரிகள் யார், நண்பர்கள் யார், ஊசலாட்டம் கொண்ட சமரச சக்திகள் யார், எந்தச் சக்திகளுடன் ஐக்கியப்பட வேண்டும், எந்த சக்திகளை வென்றெடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளோ தொடக்கம் முதலே இந்த அடிப்படையான பிரச்சினையில் தெரிந்தே தவறிழைத்தார்கள்.
ஈழ விடுதலைக்குத் தொடக்கம் முதலே எதிரியாக இருந்து சீர்குலைத்த இந்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல், “தாஜா” செய்ததோடு, இந்திய உளவுப் படையான “ரா” (RAW)விடம் ஆயுதங்களும் பயிற்சியும் நிதியும் பெற்று, அதன் வழிகாட்டுதலின்படி அப்பாவி சிங்கள குடிமக்களைக் கொன்றும், ஈழத்திலிருந்து இசுலாமியர்களைக் கெடு வைத்து விரட்டியும், இதர போராளிக் குழுக்களை அழித்தொழித்தும், தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டனர்.எந்தவொரு விடுதலைக்கான இயக்கமும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஜனநாயகப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகிறது என்பது, இனவிடுதலையின் மீது கொண்டுள்ள உறுதிக்கு ஒரு அளவுகோல். ஆனால் சிங்கள இனவெறியை எதிர்த்தும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் நின்று, புலிகளின் மனித உரிமை மீறல்களையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் விமர்சித்த குற்றத்திற்காக ராஜினி திரணகம, வசந்தன் முதலாலோனார் உள்ளிட்டு ஏராளமானோர் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டார்கள்; அல்லது அவர்கள் காணாமல் போனார்கள். புலிகள் இயக்கத்துக்குள்ளேயே பல முன்னணித் தலைவர்களும் தளபதிகளும் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். பிரபாகரனும் அவரது வட்டாரத்தைச் சேர்ந்த விசுவாசிகளும் கொண்ட சிறுகும்பலாக இயக்கத் தலைமை மாறிப் போனது.
தேசிய இன விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டதாகவும் சுயசார்பானதாகவும் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தேச விடுதலை இயக்கம் ஊன்றி நிற்கிறது என்பதுதான் அதன் புரட்சிகர தன்மைக்கான அளவுகோல். இன்றைய சூழலில், ஏகாதிபத்திய உலகமயமாக்கலை எதிர்க்காமல், எந்தவொரு தேசிய இனமும் விடுதலையைச் சாதிக்கவும் முடியாது.ஆனால் புலிகளோ, எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை. தமது தலைமையிலான தமிழீழம் இந்தியாவுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் கீழ் படிந்தே இருக்கும் என்று புலிகள் வாக்குறுதி அளித்து, அந்நாடுகளைத் “தாஜா” செய்தார்கள். கிழக்கு திமோர், கொசாவோ பாணியில் மேலைநாடுகள் தலையிட்டு தமக்கென தனி ஈழத்தை அமைத்துத் தரும் என்று நம்பினார்கள். அந்த அளவுக்குத்தான் அவர்களது உலக அரசியல் கண்ணோட்டம் இருந்தது. ஏகாதிபத்திய உலகக் கட்டமைவில் தேசிய இன விடுதலை என்பது எவ்வளவு சிக்கலானது, உலக நாடுகளின் மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவாக பொதுக்கருத்தையும் பொது நிர்பந்தத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பன போன்ற விரிந்த அரசியல் பார்வை புலிகளிடமோ, அவர்களின் ஊதுகுழலாகச் செயல்பட்ட தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமோ இருந்ததில்லை. மேலை நாடுகள் தங்களைப் பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் பிற காரணிகளைப் புலிகள் புரிந்து கொள்ளவுமில்லை.
ஒருபுறம் அமெரிக்க உலக மேல்நிலை வல்லரசு; அதன் தெற்காசிய விசுவாச அடியாளாக இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசு. மறுபுறம், உலகமயமாக்கலைச் சாதகமாக்கிக் கொண்டு புதிய சந்தைக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் விரிவடைந்து வரும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் போட்டா போட்டி. இந்துமாக் கடலில் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, இன்று இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காயாக மாற்றப்பட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியையும் கூட்டையும் பயன்படுத்திக் கொண்டு, ஈழ விடுதலைப் போரை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் ராஜபக்சே அரசு எவ்வித எதிர்ப்புமின்றி நசுக்கும் சூழலைப் பற்றி புலிகள் பாரதூரமாக உணரவில்லை. அதற்கேற்ப தமது அரசியல் இராணுவ செயலுத்திகளை வகுத்துக் கொள்ளவுமில்லை.இன்னும் சொல்லப்போனால், மக்களைத் திரட்டி எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் புலிகள் நடத்தியதேயில்லை. கடந்த பத்தாண்டுகளில் போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் அணிதிரட்டலையும் அரசியல் போராட்டங்களையும் நடத்த புலிகள் முயற்சிக்கவேயில்லை. அரசியல் பிரிவு என்றழைக்கப்பட்ட ஒரு குழுவை புலிகள் உருவாக்கியிருந்த போதிலும், அது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் எதையும் செய்ததுமில்லை. மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளைத் தோற்றுவித்து எதிரியை மண்டியிடச் செய்ய முடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவுமில்லை.
அவர்களது கவனமெல்லாம் நவீன ஆயுதங்களின் இருப்பை அதிகரிப்பதிலும் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும்தான் இருந்தது. சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக இராணுவ ரீதியில் மேலாண்மை பெற்றுவிட்டாலே, ஏகாதிபத்திய நாடுகள் சிங்கள அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தனி ஈழத்தை உருவாக்கித் தரும் என்று கணக்கு போட்டு, ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவைப் பெறுவதுதான் அவர்களது ‘அரசியல்’ வேலையாக இருந்தது.
சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சே கும்பலின் இனவெறி பாசிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும் அரசியல் சக்திகளுடன் இணைந்து, பொது எதிரிக்கு எதிராக பரந்த ஐக்கிய முன்னணி கட்டியமைத்துப் போராட சாத்தியப்பாடுகள் இருந்தபோதிலும், அரசியல் மூடத்தனத்தால் அவற்றை புலிகள் அறிந்தே புறக்கணித்தார்கள். இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றதற்கும், ராஜபக்சே கும்பல் ஆட்சிக்கு வந்ததற்கும் மிக முக்கிய காரணமே புலிகளின் சந்தர்ப்பவாத அரசியல்தான்.
இந்த சந்தர்ப்பவாதம் 2002இல் தாய்லாந்து நாட்டில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது அப்பட்டமாக வெளிப்பட்டது. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு சந்தர்ப்பவாதமாகவும் துரோகத்தனமாகவும் “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார், புலிகளின் அரசியல் தலைமை குருநாதர் ஆண்டன் பாலசிங்கம். ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டு தமது ஏகபோக ஆட்சி அமைவதையே “பிரதேச தன்னாட்சி” என்று விளக்கமளித்தார். அதேசமயம், தனிஈழம் கோரிக்கையை இன்னமும் கைவிட்டுவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக இது “இடைக்காலத் தீர்வு” என்று பூசி மெழுகினார்.இப்படி சந்தர்ப்பவாதமும் சாகச வழிபாடும் தனிநபர் துதியும் கொண்ட புலிகள், முப்பதாண்டு காலமாக பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்து படிப்பினைகளைப் பெற முன்வராமல், தொடர்ந்து பிரமைகளில் மூழ்கிப் போயினர். மறுபுறம், ஏகாதிபத்தியங்களின் ஆசியோடும், சிங்கள இனவெறி சக்திகளின் ஆதரவோடும், நவீன ஆயுதங்களின் வலிமையோடும் மிகக் கொடிய போரை ராஜபக்சே கும்பல் ஈழ மக்கள் மீது ஏவியது. உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனவெறிப் படுகொலைகளில் ஒன்றாக அமைந்த இப்போரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களோடு, புலிகளின் தலைமையும் கொன்றொழிக்கப்பட்டு, ஈழ விடுதலைப் போராட்டம் பேரழிவையும், பின்னடைவையும் சந்தித்து கையறு நிலையில் தத்தளிக்கிறது. ஈழத் தமிழினத்தையே தோற்கடித்து விட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது, சிங்கள இனவெறி.
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், ஈழத் தமிழ் மக்கள் தமது நியாயமான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.
pallavar.blogspot.com  09 08 2018
Published in Tamil