28 09 2018

வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல்

மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும்.எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகின்றதா, பிறரின் தயவிலும் பிறரை அனுசரித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதா? இந்தக் கேள்விகளை எண்ணிப் பார்த்தால், அங்கு வாழும் மக்களின் நெருக்கடிகள், பிரச்சினைகளின் தாற்பரியங்கள் விளங்கும்.வவுனியா மாவட்டத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், 36 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். அண்ணளவாக, ஒரு மாதத்துக்கு நான்கு பேர்; வாரத்துக்கு ஒருவர், தமது உடலை விட்டு, வலிந்து உயிரைப் பிரித்து விடுகின்றார்.உலகில் ஆகக் கூடிய தற்கொலைகள் சம்பவிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் காணப்படுகின்றது. இலங்கையில், ஆகக் கூடிய தற்கொலை நிகழும் பிரதேசங்களாக வடக்கும் கிழக்கும் உள்ளன. அதற்குள்ளும் இனங்கள் வரிசையில், தமிழர்கள்தான் முன்னணியில் உள்ளனர்.

இந்த நிலைமை ஏன், இதற்கான பிரதான காரணம் என்ன, இதைத் தடுத்து நிறுத்த, குறைக்க முடியாதா, இதற்குத் தீர்வுகாண ஆட்சியாளர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன, எதிர்காலத்தில் இதன் வீச்சைக் குறைக்கலாமா, அல்லது கூடிக்கொண்டே போகின்றதா?

தமிழ் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு ஆயிரம் காரணங்களை வரிசையாக அடுக்கினாலும், போரும் போர் ஏற்படுத்திய வடுக்களும் பிரதான பங்கு வகிக்கின்றன.ஓரூர் அல்லது ஒரு சமூக மக்கள் கூட்டங்கள் யாவும், ஒரே விதமான, கொடூர சூழலுக்கும், தொடர்ந்தும் இன்னல்களை அனுபவித்தால் அல்லது உட்படுத்துவதால், சமூக மட்டத்தில் கூட்டாக உருவாக்கப்படும் நிலையே, ‘சமூக வடு’ எனப்படுகிறது.நீண்ட கொடிய போரில், உறவுகளை இழத்தல், உறவுகள் காணாமல் ஆக்கப்படல், அசையும் அசையாச் சொத்துகளை இழத்தல், கலவரங்கள், பசி​ - பட்டினி, இடப்பெயர்வுகள் என்பன சமூக வடுக்களை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.போரை ஓயச்செய்தவர்கள், போருக்கான காரணங்களையும் போர் ஏற்படுத்திய சோகங்களையும் ஓயச்செய்யாமையால், தமிழ் மக்கள், தங்கள் உயிரை வலிந்து ஓயச்செய்யும் சம்பவங்கள் எகிறுகின்றன.“வடக்கு, கிழக்கில் 88 சதவீதமான மீள்குடியேற்றம், பூர்த்தி செய்யப்பட்டுள்ளது” என்று, இலங்கைக்கு உதவும் சர்வதேச நிறுவனங்களுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபை, தமிழ் மக்களின் காணிகளை, அதிகார சபைக்கு உரியது என, அதிகாரத்தனமாக கையப்படுத்தி வருவதாகவும் அதைக் காலப்போக்கில், சிங்கள மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், பல காணிகள் அவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேசத்தில் வாழும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.சில நாள்களுக்கு முன்னர், முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்கரைவெளி என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், தமது காணிகளைத் துப்புரவு செய்த போது, மகாவலி அதிகார சபை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது.

1925ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அறுதி உறுதிகளை, பலர் வைத்திருந்த நிலையில், காணி அபகரிப்பு அநியாயங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், எதை அடிப்படையாகக் கொண்டு, 88 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன என ஜனாதிபதி கூறுகின்றார். வடக்கு, கிழக்கில் முழுமையாக விடுவிக்க வேண்டிய நூறு சதவீதம் என்று அவர் குறிப்பிடும் பகுதிகள் எவை?

தமது ஆட்சிக்காலத்தில், முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் அங்கு குடியேற்றங்கள் நடைபெற்றன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்தார்.காணியையும் ஊரையும் இழந்தவனுக்கு யார் ஆட்சி என்றால் என்ன? ஆனால், அரசின் பின்புலத்துடன், சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பது மட்டும் வெளிச்சம். ஜனாதிபதி கூறிய, விடுவிக்க வேண்டிய மிகுதி 12 சதவீதத்துக்குள், தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்த காணிகள் வருகின்றனவா?

ஓர் இரவுக்குள், ஊரை விட்டுத் துரத்தி, அங்கு பெரும்பான்மையின மக்களைக் குடியேற்றிய (1984) மணலாறு, மிகுதியாக விடுவிக்க வேண்டிய 12சதவீதத்துக்குள் வருகின்றதா? அங்கு, தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதும் மீள் குடியேற்றம் தானே?

அங்கு, அரசாங்கத்தின் சகல சலுகைகள் உட்பட, பல்வேறு வசதிகள் வாய்ப்புகளோடு குடியேறிய பெரும்பான்மையின மக்கள், இதற்கு அனுமதிப்பார்களா? உரியதை உரியவனிடம் கொடுப்பதே நியாயம் என்ற பெருந்தன்மை வருமா? தமிழர்களின் காணிகளை விட்டு விலகுமாறு, ஆட்சியாளர்கள், சிங்கள மக்களைக் கேட்பார்களா?

அப்பிரதேசங்கள், தாரை வார்க்கப்பட்டவைகள் எனத் தமிழ் மக்கள் திடமாக நம்புகின்றார்கள். நல்லாட்சியால் நல்லவை நடக்கும்; அக்காணிகள் தமக்கு மீளக் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள், தகர்ந்து விட்டன. அதற்குக் காரணம், நல்லாட்சியின் இயலாமையும் விரும்பம் கொள்ளாமையும் ஆகும்.

பாட்டன், பாட்டி என மூதாதையர் சீரும் சிறப்புமாக வாழ்ந்த, வாழவைத்த காணிகள், தமக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை என்ற வாழ்நாள் கவலையுடன், தமிழ் மக்கள் உள்ள வேளையில், எவ்வாறு அவர்களுக்கு வளமான வாழ்வுந்துதல் வரும்?

புரட்டாதி மாதம் 21ஆம் திகதி, சர்வதேச சமாதான தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. மக்கள் தங்கள் முரண்பாடுகளை, வன்முறைகள் இன்றி, ஒன்றாகக் கூடிக் கதைத்து, தமது வாழ்வாதார உயர்ச்சியை நோக்கிச் செயற்பட்டால், அதைச் சமாதானம் எனலாம்.சமாதானம் பல பண்பியல்புகளை உள்ளடக்கியுள்ளது. அதில் முக்கியமானதாக, அரசாங்கம், மக்களுக்குப் பொறுப்புக் கூறுதல் ஆகும். போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு, தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் (ஐ.நா) பொறுப்புக் கூற வேண்டிய, பொறுப்பான நிலையில் உள்ள அரசாங்கம், தனது பொறுப்புகளை, கடமைகளை ஐந்து வருட ஆட்சிக்காலத்தில் எப்படித் தட்டிக் கழித்தல், காலங்கடத்தல் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறது; இருந்து வந்துள்ளது.இப்படித்தான் நடைபெறுகின்றது என்பது, தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும்; தமிழ் மக்களுக்கும் தமது நடிப்புத் தெரியும் என்பதும் அரசாங்கத்துக்கும் புரியும்; ஐ.நாவுக்கும் விளங்கும்.

ஆனால், தமிழ் மக்களுடன் சேர்ந்து, கட்டிப் பிடித்து கண்ணீர் விடும் நிலையிலேயே ஐ.நா சபையும் உள்ளது. தமிழ் மக்களது கண்ணீருக்குக் காரணமான கதைகளுக்கு முடிவு கட்ட முடியாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு விடிவு கொடுக்க முடியாமல் உள்ளது.உலகின் பொது நீதிமன்றமான ஐ.நாடுகள் சபை, தமக்கு வெளிச்சத்தைத் தரும் என்ற தமிழ் மக்களது எதிர்பார்ப்பு, இன்று பெரிய வினாக்குறியுடன் தொக்(ங்)கி நிற்கின்றது. இரு தரப்பு அணிகளுக்கிடையில், போர் நிகழும் வேளை, முதலில் செத்து மடிவது ‘உண்மை’ என்பார்கள். அது போலவே, தமது பக்க உண்மை(கள்) செத்து மடிந்து விடுமோ என, தமிழ் மக்கள் நாளாந்தம் செத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆயுதப் போரால் வடக்கு, கிழக்கில் இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், தங்கள் இல்லங்களை இழந்து விட்டனர். நல்லாட்சி அமைந்தவுடன் இல்லங்கள் தொடர்பான பிரச்சினை இல்லாமல் போகும் என, பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தகர வீடா, கல் வீடா, வீட்டுக்காரர் கட்டுவதா, ஒப்பந்தகாரர் கட்டுவதா, இந்தியா கட்டுவதா, சீனா கட்டுவதா? என்ற வீணான பிடுங்குப்பாடுகளுக்குத் தீர்வு காண முடியாமல், பல ஆண்டுகள் சென்று விட்டன.ஏற்கெனவே, கடந்த ஆட்சியில் ஐந்து இலட்சம் உதவு தொகையில், வீட்டைக் கட்ட ஆரம்பித்து, வீடும் கட்டிமுடிய, அனைத்து நகைகளும் கைநழுவி விட்ட நிலையில், மக்கள் உள்ளனர்.இல்லம் சரி செய்வதற்கே, உள்ளம் சரி வராத நிலையில், போர்க்குற்ற விசாரணை, அரசமைப்பு மூலமான நிரந்தரத் தீர்வு எல்லாம், வெறும் பேச்சுக்கு மட்டுமே அன்றி, செயல் உருப்பெறுவதற்கான நிகழ்தகவுகள் எத்தனை சதவீதம் உண்டு என்பது, அவரவர் உய்ந்தறியக் கூடிய விடயமாகும்.பாரிய பேரிடருக்கு, சற்றும் விருப்பின்றி வலிந்து முகம் கொடுத்த தமிழ்ச் சமூகம், தனது பண்புகளையும் பெறுமானங்களையும் தக்க வைக்க, இன்னமும் தொடர்ந்தும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளது.

தங்களது பாதுகாப்பு, மாண்பு, உரிமைகள் என்பவற்றுக்காகக் கொடிய போரின் பிற்பாடு, கூடவே இருந்து, நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய அரசாங்கம், நெருக்கடிகளைத் தொடர்ந்தும் வழங்கி வருவதாகவே தமிழ் மக்கள் உணர்கின்றனர்.ஒவ்வொரு தனிநபர்களிலும் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒவ்வோர் இ(ம)னங்களிலும் அமைதி நிலவினால் மாத்திரமே, ஒட்டு மொத்த நாட்டிலும் சமாதானம் நிலவும். இல்லையேல், ஓரினம் வாழ்வுந்துதலுடனும் பிறிதோர் இனம் சாவுந்துதலுடனும் பயணிக்கும்.நம்பிக்கை தான் வாழ்க்கை என்று கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம். சின்னச் சின்ன, பெரிய பெரிய நம்பிக்கையிலேயே ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றான். ஆனால், அந்த நம்பிக்கையை முற்றிலும் தொலைத்து விட்டே, ஈழத்தமிழர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதே முற்றிலும் உண்மை. ஏனெனில் அவர்களது பட்டறிவு, நம்பிக்கையீனங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

tamilmirror 25 09 2018

Published in Tamil

23 09 2018

விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்!

யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார்.முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான்.ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியானவாக்கைப் பெற்றவர்.அவரை அவமதிப்பது என்பது அவரைத் தெரிந்தெடுத்த மக்களையும் அவமதிப்பதுதான். அவருக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாகும். அவரை இவ்வாறு அவமதித்திருப்பது தமிழ்த்தரப்பே என்பது ஒரு கேவலமான விடயம்.

டெனீஸ்வரனின் விவகாரத்தில் அவர் கெட்டித்தனமாக நடந்திருந்திருக்கலாம். ஒரு தலைவராக அந்த விடயத்தில் அவர் வெற்றி பெறவில்லை.ஒரு நிர்வாகியாகவும் அவர் போதியளவு வெற்றி பெறவில்லை. எனினும் தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி அவமதித்ததை தமிழ் மக்களின் ஒரு பகுதியினரே ரசிக்கக் கூடாது. அது வடமாகாண சபைக்கும் ஒரு அவமானம் தான் என்று.ஏறக்குறைய இதே தொனிப்பட வடமாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீண்டும் ஒரு தடவை நீதிமன்றம் ஏறுவதை நான் விரும்பவில்லை. இச்சபையும் ஏற்றுக்கொள்ளாது என்று சிவஞானம் கூறினார்.

விக்னேஸ்வரன் தன்னை முதலாவதாக ஒரு நீதியரசர் என்றே குறிப்பிடுகிறார். அவருடைய உத்தியோகபூர்வ கடிதங்களிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய உரைகள் அடங்கிய தொகுப்பிற்கும் ஒரு நீதியரசர் பேசுகிறார் என்றுதான் தலைப்பிடப்பட்டுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பிற்குள் அவர் வகித்த பதவிகளைவிட்டு அவர் பெருமைப்படுவதை இக்கட்டுரை விமர்சனத்தோடுதான் பார்க்கிறது.பயங்கரவாத தடைச்சட்டத்தினை தன்னுள் கொண்டிருக்கும் வரை இலங்கைத் தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பைத் தமிழ் மக்கள் இன சாய்வுடையதாகவே பார்ப்பார்கள்.எனினும் விக்னேஸ்வரன் தனது நீதியரசர் என்ற பிம்பத்தைதான் தன்னுடைய சிறப்பு அடையாளமாகக் கருதுகிறார். தன்னுடைய அரசியலுக்குரிய அடித்தளமாகவும் கருதுகிறார்.ஆனால் அதே சட்டத்துறைக்குள் அவருடைய எதிரிகள் அவருக்குப் பொறி வைத்துவிட்டார்கள். அவர் இப்பொழுது ஒரு சட்ட பொறிக்குள் சிக்கியுள்ளார்.

தன்னுடைய பலம் என்று அவர் கருதும் ஒரு தளத்திலேயே அவருடைய மாணவர் ஒருவரும் வயதால் மிக இளைய தொழில்சார் சட்டத்தரணிகளும் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் வழக்குகளை எதிர்நோக்க வேண்டிய அளவுக்கு நிலமை வந்துவிட்டது.இச்சட்டப் பொறிக்குள் இருந்து விடுவதற்கு சட்டத்திற்குள்ளால் மட்டும் சிந்தித்தால் போதாது. அதற்கும் அப்பால் ஒரு தலைவருக்குரிய துணிச்சலோடும் தீட்சட்ணியத்தோடும் வெட்டொன்று துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க வேண்டும். இதை ஒரு சட்டப்பிரச்சனையாக அணுகாமல் அரசியல் விவகாரமாக அணுக வேண்டும்.அவர் தன்னுடைய பலம் என்று கருதும் அறத்தையும் நேர்மையையும் நீதியையும்தான் அவருடைய பலவீனம் என்று அவரை எதிர்ப்பவர்கள் நம்புகிறார்கள். அவரை முகநூலிலும் ஊடகங்களிலும் விமர்சிக்கும் பலர் தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்ப்பதுமில்லை.

தமது இறந்த காலத்தைத் தராசில் வைத்து நிறுப்பதுமில்லை. விக்னேஸ்வரனை எதிர்ப்பதனாலேயே தங்களுக்கு பிரபல்யமும் அந்தஸ்தும் கிடைத்துவிடும் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.ஒரு நீதியரசராக அவரை நெருங்க முடியாத பலரும் அவர் முதலமைச்சராக சறுக்கும் இடங்களில் அவரை கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பலம் என்று கருதுவதையே அவருடைய பலவீனமாகக் கருதும் எதிர்த்தரப்பை அவர் எப்படி வெற்றி கொள்ளப் போகிறார்?கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் அவர் முன்வைத்த நான்கு தெரிவுகளில் ஒன்றை சுமந்திரன் கெட்டித்தனமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். ஒரு மக்கள் அமைப்பைக் கட்டியெழுப்பி அதற்குத் தலைமை தாங்குவது என்பதே அது.

விக்னேஸ்வரன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழுப்பினால் அதில் தானும் இணைய விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். விக்னேஸ்வரன் அத் தெரிவை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று சுமந்திரன் நம்புகிறார்.இவ்விடயத்தில் சுமந்திரன் விக்னேஸ்வரனின் ஆளுமையை சரியாக விளங்கி வைத்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா? விக்னேஸ்வரனின் இறந்தகாலம் வாழ்க்கை ஒழுக்கம் என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் ஒருவர் சுமந்திரன் நம்புவது சரி என்ற முடிவிற்கே வருவார்.தமிழ் மக்கள் பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களின் வாழ்க்கை ஒழுக்கம் இறந்தகாலம் துறைசார் நிலையான நலன்கள் போன்றவற்றை தொகுத்துப் பார்க்கும் எவரும் அப்படித்தான் முடிவெடுப்பார்.ஒரு மக்கள் இயக்கத்திற்குத் தலமை தாங்குவதற்குத் தேவையான துணிச்சலும் ஒழுக்கமும் தன்னிடம் இருப்பதாக விக்னேஸ்வரனும் இதுவரையிலும் எண்பித்திருக்கவில்லை. பேரவையும் எண்பித்திருக்கவில்லை என்றபடியால்தான் சுமந்திரன் அந்த சவாலை முன்வைக்கிறார்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட சிவில் அதிகாரி பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார் விக்கி ஒரு மக்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்குவது நல்லது.அந்த இயக்கம் தமிழ் வாக்காளர்களின் அபிப்பிராயத்தைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும் என்று.ஆனால் விக்னேஸ்வரானால் அப்படியொரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? இக்கட்டுரை எழுதும் இக்கணம் வரையிலும் விக்கி ஒரு தேர்தல் மைய அரசியல்வாதியாகவே தெரிகிறார். தமிழ் மக்கள் பேரவையும் அதிகபட்சம் ஒரு பிரமுகர் மைய அமைப்பாகவே தெரிகிறது.சில நாட்களுக்கு முன் வவுனியாவிலுள்ள ஒரு நண்பர் கைபேசியில் கதைத்தார். விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். அண்மையில் ஒரு மாகாண சபை ஊழியரின் திருமணத்திற்கு செல்வதற்காக அவர் சபை அமர்வை தவிர்த்தார்.

இது பற்றி நிருபர்கள் கேட்ட போது திருமணம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வருமென்று கூறினார். அதாவது ஒரு திருமண நிகழ்வை விடவும் சபை அமர்வை முக்கியமில்லை என்று கருதுகிறார்.அப்படியென்றால் அதிகாரமற்றதும் முக்கியத்துவமற்றதுமாகிய ஒரு மாகாண சபையில் மறுபடியும் முதலமைச்சராக வர அவர் ஏன் விரும்புகிறார்? என்று. தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரும் இடைக்கிடை என்னிடம் கூறுவார் விக்கியை முதலமைச்சராக்குவதுதான் பேரவையின் இலட்சியம் என்றிருக்கக் கூடாது என்று. ஆனால், அதிகாரமற்றதே எனினும் ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருப்பதனால்; நன்மைகள் உண்டு என்றுநம்புவோர்; பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1. அந்த இடத்திற்கு பிழையான ஒருவர் வருவதைத் தடுக்கலாம். அதாவது மாகாண சபைக்கு அதிகாரம் உண்டு என்று நம்பும் ஒருவர் அந்த இடத்தை அடைந்தால் அது தமிழ் மக்களுக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும்.13வது திருத்தத்தில் போதியளவு அதிகாரம் இருப்பின் தமிழ் மக்கள் நந்திக் கடற்கரையைக் கடந்து வந்திருக்கத் தேவையில்லை. எனவே உச்சமான தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்டு எதிர்க்குரல் கொடுக்கும் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும்.

2. ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் முன்வைக்கும் எதிர்க்கருத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் உண்டு. சட்டவாக்க வலுவுடையது என்று கூறப்படும் ஓர் அவையின் முதல்வர் அதன் சட்டவாக்க வலு போதாது என்று கூறும் போது அதை உலகம் கவனிக்கும். மேலும் முதலமைச்சர் என்ற பதவி வழி சந்திப்புக்களுக்கூடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் வெளிகொண்டு வரப்படும்.

3. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு ஒரு பேரவை போன்ற அமைப்பிற்கு அவர் தலைமை தாங்கும் போது அதற்கு ஓர் அந்தஸ்த்துக் கிடைக்கும். பேரவை ஒரு கட்சியில்லை என்றே அவர் கூறுகிறார். எல்லாத் தரப்பும் இடை ஊடாடும் பரப்பு அது.

அது கறுப்பு வெள்ளைப் பரப்பல்ல. ஒப்பீட்டளவில் சாம்பல் நிற பண்பு அதிகமுடைய ஒரு பரப்பு அது. அப்படி ஓர் அமைப்பு தமிழ் மக்களுக்கு அவசியம்.; அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் நெருப்பை அணையாது பாதுகாத்து உரிய அடுத்த கட்டத் தலைமையிடம் ஒப்படைக்கப் பேரவை போன்ற அமைப்பு அவசியம். விக்னேஸ்வரனைப் போன்ற பிரமுகர் மைய அரசியல்வாதிகளும் அவசியம்.யுத்தத்தில் இனப்படுகொலை மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்,தொடர்ந்தும் யுத்தமற்ற வழிகளில் கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு உள்ளாகிவரும் ஒர் அரசியற் சூழலில் யுத்தத்தை உடனடுத்து வரும் காலத்தின் அரசியல் இப்படித்தான் இருக்கும்.இது ஒரு இடைமாறு காலகட்டம்.இந்த இடைமாறு காலகட்டத்தில் பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்ற பிரமுகர்களே தலைவர்களாக இருப்பர்.இவர்கள் உரிமைப் போராட்டத்தின் நெருப்பை குறைந்த பட்சம் அணையவிடாது பாதுகாத்தாலே போதும்.

4. ஏற்கனவே கூறப்பட்டது போல விக்னேஸ்வரன் ஒரு பிரமுகர் மைய அரசியல்வாதிதான். அவருடைய கொள்ளளவு அவ்வளவுதான். அவரிடம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது.ஓர் இடைமாறு கால கட்டத்தின் நேர்மையான குரல் அவர். இவ்இடைமாறு கால கட்டத்தில் நெருப்பை அணைய விடாமல் பாதுகாத்தாலே போதும். அதை ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டுதான் செய்ய முடியும் என்றால் ஒரு கட்டம் வரை தமிழ் மக்கள் அதை ஒரு இடைமாறு காலகட்ட ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளலாம்.

5. அவர் ஒரு முதலமைச்சராக வந்தால் அது தமக்கு பாதகமானது என்ற கருதியதால் தான் ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு சுமந்திரன் கேட்கிறார். இதை மறு வழமாகச் சொன்னால் எதை அவரால் செய்ய முடியுமோ அதைச் செய்யாது எது அவரால் முடியாதோ அதை ச்செய்யுமாறு தூண்டுகிறார்.தேர்தல் மைய அரசியலை விடவும் மக்கள் மைய அரசியல் கடினமானது என்று அவர் கருதுகிறார். விக்னேஸ்வரனை தேர்தல் மைய அரசியலில் இருந்து அகற்றுவதால் வரக்கூடிய நன்மைகளைக் கருதி அவர் அவ்வாறு கூறுகிறார்.அதாவது தேர்தல் களத்தில் நிற்கும் விக்னேஸ்வரனுக்கு அவர் பயப்படுகிறார் என்று பொருள்.

எனவே தனது பலமெது? பலவீனமெது? எனக் கண்டு அதற்குரிய முடிவை விக்னேஸ்வரன் எடுக்க வேண்டும். அவருடைய பதவியின் இறுதிக் கட்டத்தில் அவர்; பலம் என்று கருதிய ஒரு களத்திலேயே அவருக்குப் பொறி வைக்கப்பட்டிருக்கிறது.அவர் அவமதிக்கப்படுகிறார்.இந்தஇடத்தில் அவர் தனது மெய்யான பலத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவரை நேசிக்கும் மக்களே இப்பொழுது அவருடைய மெய்யான பலம்.அவரை அவமானப்படுத்துவோருக்கு எதிரான தோற்கடிக்கப்பட முடியாத பலமும் அதுதான். ஒரு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது தமக்குப் பாதகமானது என்று கருதுபவர்கள் அவரைத் தேர்தல் அரங்கிலிருந்து அகற்றத் துடிக்கிறார்கள். கெட்டிக்காரத் தலைவர்கள் எப்பொழுதும் எதிரி விரும்புவதைச் செய்வதில்லை.

– நிலாந்தன் thinakkural'lk 17 09 2018

Published in Tamil

18 09 2018

விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது.அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.

அதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்தில் சில மாறுபட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் அணுகுமுறைகள் தொடர்பாக உங்களின் கருத்து என்ன?” என்பது ஆங்கில மூலத்தில் இருந்த வினா? அதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், “எமது மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், தேவைகளில் இருந்து அவர்கள் விலகியே நிற்கிறார்கள். அவர்களிடம் விடப்படுமானால், எமது அடிப்படை அரசியல் அபிலாஷைகளை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படும். எமது மக்களின் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது. தவறான தமது கருத்துகளே, சரியானவை என்ற மனோநிலையில் இருக்கிறார்கள்” என்று பதிலளித்திருந்தார்.

ஆனால், முதலமைச்சரின் செயலகத்தால் அனுப்பப்பட்ட மொழியாக்கத்தில், இந்தக் கேள்விக்கு, “ எமது மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், அவசியங்களில் இருந்து எட்டியே நிற்கிறார்கள் அவர்கள். அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால், அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து இருக்க விடக்கூடாது என்ற தொனிப்பட அமைந்திருந்தது. அதற்கே தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்திருந்தன. பல தலைப்புச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தன.ஒரு செவ்வியில் வேறுபட்ட அர்த்தங்களை உருவாக்க முயன்றதன் மூலம், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் ஊடகங்களுக்கு ஒரு முகத்தையும் ஆங்கில ஊடகங்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்ட விரும்புகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

பொதுவாகவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் ஊடகங்களுக்கு விரிவான செவ்விகளை அளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அவ்வப்போது குறுகிய நேரம் செய்தியாளர்களுடன் உரையாடுவதை விட, விரிவாகப் பேசக் கூடிய விடயங்களுக்கு அவர் தயக்கம் காட்டுகிறார். அது முன்னெச்சரிக்கையான விடயம் என்றாலும், இந்தச் செவ்வி விடயத்தில், சில கேள்விகள் எழுகின்றன.ஊடகங்களுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கிறார். ஊடகங்களில் இருந்து விலகி விட்டால், தாம் மறக்கப்பட்டுப் போவோம் என்பது அவருக்குத் தெரியும்.அதனால் அவர், முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பாணியைக் கையில் எடுத்துக் கொண்டு, கேள்வி - பதில் அறிக்கைகளை, அவராகவே தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்.

செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு என்றே, முதலமைச்சர் பதில் அனுப்புவார். ஆனால், அவர் பதிலளிக்க விரும்பும் கேள்விக்கு மாத்திரம், தாம் பதிலளிக்க விரும்பும் வகையிலேயே அது அமைந்திருக்கும் - அமைக்கப்பட்டிருக்கும்.இந்தப் பாணியை வேறு மொழியிலாவது, எந்த அரசியல்வாதியேனும் கையாண்டார்களா தெரியாது. ஆனால், தமிழில் இதை அறிமுகப்படுத்தியவர் மு.கருணாநிதி தான். தினமும், அவரது, கேள்வி -பதில் அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்படும். பக்கம் நிரப்பச் சிரமப்படும் மாலை நாளிதழ்களுக்கு, அது மிகவும் வரப்பிரசாதமாகவும் இருக்கும்.

கருணாநிதியின் கேள்வி - பதில் அறிக்கையை அவர் மாத்திரமன்றி, அவரது தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனும் தயார்படுத்துவது வழக்கம். அதற்காகக் கருணாநிதி ஒருபோதும், ஊடகங்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கத் தயங்கியதோ - தவறியதோ இல்லை. இதையும் ஒரு தனித்துவமான ஆயுதமாகவே அவர் கையாண்டார்.கருணாநிதி நோயுற்ற பின்னரும், அவரது பெயரில் அறிக்கைகளும் கேள்வி - பதில் அறிக்கைகளும் வெளியாகின. அதை, கருணாநிதியின் தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனே தயாரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மு.க. ஸ்டாலின் அதை நிறுத்தி விட்டார். இயலாமல் இருக்கும் போது, கருணாநிதியின் பெயரில் அறிக்கைகள், பேட்டிகள் வெளியாவது அபத்தம் என்பதால், அதை நிறுத்தி விட்டதாக அவர் கூறியிருந்தார்.முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்த அறிக்கையை வேறு யாரேனும் தயாரித்துக் கொடுக்கிறார்களோ அல்லது அவரே தயாரித்துக் கொள்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் ஊடகங்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்காகவே, இதைப் பயன்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறு அவர் அனுப்பியதையெல்லாம் அப்படியே வெளியிட்டுப் பழகிப் போன தமிழ் ஊடகங்களுக்கு, ஆங்கில மொழியில் வெளியான மூலச் செவ்விக்கும், இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை. முதலமைச்சரின் செயலகமே அனுப்பிய மொழிபெயர்ப்பு என்பதால், பிழையிருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்களும் பிரசுரித்து விட்டனர். இந்த நிலையில், எதற்காக, முதலமைச்சரின் செயலகம் மாறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில், மொழியாக்கத்தை அனுப்பியது என்ற கேள்வி எழுகிறது.

அதாவது, ஆங்கிலத்தில் அந்தச் செவ்வியில் இடம்பெற்ற விடயங்களில் மென்மைத் தன்மையையும் தமிழில் அது கடினத்தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.‘சம்பந்தன், சுமந்திரனை விட்டு வைக்கக்கூடாது’ என்ற தொனி மொழியாக்கப் பிரதியில் தெரிகிறது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒருவித கோபம் அதில் தெறிக்கிறது.அதிலும் “இவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால்” என்று கூறப்படும் வசன நடைக்கு, தமிழில் பல்வேறு அர்த்தங்களை அவரவரே போட்டுக் கொள்ளவும் முடியும். அதில் ஆபத்தான - அபத்தமான விடயங்களும் உள்ளன. சிலவேளைகளில் ஆங்கிலத்தில் சற்று அழுத்தமில்லாமல் கூறிய விடயத்தை, தமிழில் அழுத்திக் கூற முதலமைச்சர் விரும்பியிருக்கலாம்.

இவ்வாறான சிக்கல்கள் வரும் போது, பொதுவாகவே அரசியல்வாதிகள், ஊடகங்களின் மீது பழியைப் போடுவது வழக்கம். “செவ்வி எடுத்தவர் தவறாக விளங்கிக் கொண்டார்; எனது கருத்தை மாற்றி விட்டார்” என்று குத்துக்கரணம் அடிப்பார்கள்.ஆனால், ஆங்கிலத்தில் செவ்வி எடுத்தவர், தனது கருத்தை மாற்றி விட்டார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலகுவாகக் குற்றம்சாட்ட முடியாது. அவர் ஆங்கிலச் செவ்விகளையும் கூட, பொதுவாகவே மின்னஞ்சலில் கேள்விகளைப் பெற்று, தானே, அதற்கு எழுத்து மூலம் பதிலளிப்பது வழக்கம். மொழியாக்கப் பிரதியும் கூட, அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி நடையில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, இது முதலமைச்சருக்குத் தெரியாத விடயம் என்று கூறமுடியாது.

எவ்வாறாயினும், ஓர் ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்க விடயத்தில், ஊடகங்களைத் தவறாக வழிநடத்த முயன்றிருந்தால் அது தவறான அணுகுமுறை. முதலமைச்சர் தனது கருத்து இதுதான் என்று உணர்ந்திருந்தால், தாராளமாகவே, அவரது கேள்வி - பதில் பாணி அறிக்கையில் மிகத் தெளிவாக அதைக் கூறியிருக்கலாம். அதுதான் அறமும் கூட. முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கைகளை அப்படியே போட்டுப் பக்கங்களை நிரப்பிப் பழக்கப்பட்டுப் போன ஊடகங்கள் இப்போது, தெரிந்தோ தெரியாமலோ, தாம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதையிட்டு வெட்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இது என்ன பெரிய பிரச்சினை என்று யாரேனும் கருதலாம். மிகப்பெரிய பிரச்சினையோ பிழையோ இல்லைத் தான்.ஆனால், ‘முதலமைச்சர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு கூறியிருக்கிறார்’ என்ற குறிப்புடன் அதைப் பிரசுரித்த ஊடகங்களுக்குத் தான் இது பெரிய பிழை. ஏனென்றால், ஆங்கிலச் செவ்வியின் மூலம், அவ்வாறு இருக்கவில்லை. எனவே, ‘ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்கம்’ என்று அதைக் குறிப்பிடுவது அறமாகாது.

அரசியல் தலைவர்களின் இதுபோன்ற செவ்விகள், அவர்களின் ஊடகப் பிரிவுகளால், மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுவது வழக்கம் தான். அவர்கள், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கோ, சில விடயங்களை அழுத்திச் சொல்வதற்கோ தான், அவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம்.அதுவே பிரச்சினையாக வெடித்தால், சில வேளைகளில் அரசியல்வாதிகள் ஊடகங்களைப் பலிக்கடா ஆக்கி விட்டும் தப்பித்துக் கொள்வார்கள்.இந்த நிலையில், பிரதியெடுத்துப் பிரசுரிக்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம், தமிழ் ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலமைச்சரின் செவ்வியும் மொழியாக்கமும் உணர்த்தி விட்டிருக்கின்றது.

tamilmirror.lk  

Published in Tamil

07 09 2018

புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ?

இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, புலிகளை விமர்சிப்பது தற்காலத்தில் அவசியம் அற்றது என்னும் போக்கு, தங்களை கடந்த காலங்களில் ஜனநாயகவாதிகளாக இனம் காட்டி புலியின் பக்கமோ அன்றி அரசின் பக்கமோ வெளிப்படையாக சாராதிருந்த பலரிடம் இன்று காணப்படுகின்றது. இதற்கு இவர்கள் கூறும் காரணங்கள் பல:
1.புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்துள்ளனர். இந்த நேரத்தில் தமது இயக்க வரலாற்றில் என்றுமே தோல்வியினை காணாத அவர்களை விமர்சிப்பது தடக்கி விழுந்தவன் மேல் மாடேறி மிதிப்பது போன்றுள்ளது.
2.புலிகள் இயக்கத்தில் பலர் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர் இவ்வாறிருக்கையில் எப்படி புலிகளை விமர்சிக்க முடியும்.
3.புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களையும் புலிகளை நேசித்தவர்களையும் வெல்ல வேண்டும். ஆகவே புலிகளின் தவறுகளை விமர்சிப்பது கைவிடப்படல் வேண்டும்.
4.சரி பிழைகளிற்கு அப்பால் புலிகள் விடுதலைக்காக செய்த உயிர்த் தியாகங்கள் அளப்பெரியவை. அவர்களினுடைய வேதனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
5.புலிகள் இறுதிவரை அரசுக்கு எதிராக யுத்தம் நடத்தியவர்கள், அவ்வாறிருக்க எப்படி நீங்கள் விமர்சிகக் முடியும்.
6.புலிகள் யுத்தம் செய்யும் போது நாட்டைவிட்டு ஓடிவிட்டு, அவர்கள் அழிந்த பின்னர் அவர்களை விமர்சிக்கின்றீர்கள் இதற்கு உங்களிற்கு என்ன தகுதியுண்டு?
7.புலிகள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியலில் (கூட்டணியின் அரசியலுக்கு ஆயுத வடிவம் கொடுத்தனர்) இருந்து தான் தமது அனைத்து செயற்பாடுகளையும் செய்தனர். அதனால் நாம் ஒட்டு மொத்த தவறுகளையும் அவர்களின் தலையில் போட்டுவிட முடியாது.

இவ்வாறு பல கோணங்களிலும் பலவடிவங்களிலும் புலிகளை விமர்சிப்பதை தவிர்ப்பது பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணி தான் என்ன? தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அதன் தோல்விக்கான காரணங்களை குறித்து மௌனம் சாதியுங்கள். புலிகளின் மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசியலை விமர்சனத்திற்கு உள்ளாக்காதீர்கள். மக்களிற்கு அரசியல் அறிவு ஊட்டாதீர்கள் என்பதுடன் புலிகளின் அரசியலின் தொடர்ச்சியாகவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதுவும் தான்.புலிகளில் இருந்தோ அல்லது புலிகள் கொண்ட அரசியலில் இருந்தோ அடுத்த கட்ட நகர்வு என்பது மீண்டும் இன்னுமொரு முள்ளிவாய்காலையோ அல்லது களனி கங்கையையோ உருவாக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

புலிகள் கொண்டிருந்த அரசியல் மக்கள் நலனற்றது. சொந்த மக்களை ஆயுதங்கொண்டு அச்சுறுத்தி வைத்திருந்தது. அந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கியது. மக்களை நேசித்த தேசபக்தர்களை கொன்று போட்டது. இலங்கை அரசினால் ஒடுக்குமுறைகளிற்கு உள்ளான முஸ்லீம், சிங்கள மக்களை வென்றெடுப்பதற்குப் பதிலாக அவர்கள் மீது வன்முறையினை ஏவி போராட்டத்தின் நேச சக்திகளை அந்நியப்படுத்தியது. ஆனால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளான வல்லரசுகளை நம்பி அவர்களுடன் கூட்டு வைத்திருந்தது. மக்கள் சக்தியினை விட மேற்குலகின அதிநவீன ஆயுதங்களை நம்பி செயற்பட்டது. இவர்களின் அமைப்பின் வடிவம் இவர்களிற்குள்ளேயே மேற்குலகம், சிறீலங்கா, இந்தியா தமது கையாட்களை இலகுவாக உருவாக்க வழிகோலியது. இப்படி பல பல. இவைகள் தான் புலிகளின் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு காரணமாயின.

மாற்றுக் கருத்து அல்லது தமது இயக்கம் மீது விமர்சனம் செய்பவர்களை ஒரே வார்த்தையில் துரோகி என்று அழித்தொழித்தவர்கள் தான் புலிகள். சிறைப் பிடித்து வைத்திருந்த மாற்று இயக்கப் போராளிகளையும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பல உன்னதமான மனிதர்களையும் மனிதநேயமற்ற முறைகளில் சித்திரவதைகள் செய்து கொன்று புதைத்தனர். புலிகளின் முகாம்களிற்கு முன்னால் எமது தாய்மாரும், தந்தைமாரும், சகோதரிகளும் தமது தந்தையை, கணவனை, மகனை, மகளை விடுதலை செய்ய வேண்டி அழுது அலைந்த அவலங்களையும்; புலிகள் அவர்களை மனித நேயமற்ற முறையில் தகாத வார்த்தைகளை கூறி எட்டி உதைத்து அடக்குமுறையாளர்களை விடவும் மிகவும் கேவலமான முறையில் நடந்தனர். காலங்காலமாக யாழ் மண்ணிலே வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை 72 மணி நேரத்தில் உடமைகள் அனைத்தினையும் பறித்தெடுத்து துரத்தி அடித்தனர். இது கிட்லர் யூத இன மக்களிற்கு செய்த கொடுமைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. இதனால் தான் புலிகளை பாசிச சக்தி என்று விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர். புலிகள் பாசிச சக்தி இல்லை என்றால் ஏன் மற்றுக்கருத்தாளர்களை சித்திவைதைகள் செய்து கொன்று குவித்தனர்? புலிகளின் பாசிச நடவடிக்கைளினால் துன்புற்ற பல ஆயிரக்கணக்கான எம்மக்களின் வேதனைகள் துன்பங்கள் உங்களிற்கு ஒரு பொருட்டே கிடையாதா? இவைகள் பற்றி என்றுமே வாய்திறக்காது இருந்துவிட்டு இன்று வந்து விட்டீர்கள், புலிகளின் தோல்விக்கு பின்னான வேதனைகளிற்கு மருந்து போட்டு அவர்களை மீண்டும் சிம்மாசனத்தில் ஏற்றி உங்கள் இருப்புக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு.

புலிகளின் இந்த பாசிசக் கூறு என்பது புலிகளின் அரசியலையே காட்டி நிற்கின்ற அதேவேளை, புலிகளின் தலைமையைத் தான் அது கூறியும் நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்பணித்த வீரர்களிற்து பாசிசப் புலிகள் என்னும் பதம் பொருந்தாது. இவர்கள் தமிழ் மக்களின் விடுதலை புலிகளினால் வெற்றி கொள்ளப்படும் என திடமாக நம்பி, தமது விலைமதிப்பற்ற உயிரினை தியாகம் புரிந்த வள்ளல்கள். மாறாக மீண்டும் புலிகளைப் போன்று பாசிசக் கூற்றுடன் ஒரு அமைப்புத் தோன்றி மீண்டும் பல லட்சம் பேரையும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும் கொன்று குவிக்கும் அரசியலை உருவாகவிடாது தடுப்பதே அவசியமாகும்.புலிகள் யுத்தத்தில் தோல்வியுற்ற நிலையில் அவர்களை விமர்சிப்பது விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்றது என்பது குறித்து:புலிகள் உலக வல்லரசுகளால் நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டிருந்தால் இந்த கூற்றை ஆதரிக்க முடியும். மாறாக புலிகள் மேற்கத்தேய நாடுகளை நம்பி தமிழ் மக்களை வைத்து பேரங்கள் நடத்தியதன் மூலமுமே தோற்கடிக்கப்பட்டார்கள்.புலிகள் அமைப்பு ஏன் யுத்தத்தில் தோற்றது? புலிகள் மக்களுக்கான ஒரு அமைப்பாகவா இருந்து? இவர்கள் தமது தோல்விக்கான உள்நிலை கூறுகளை உருவாக்கியதால் தான் தோற்றனர். மக்களை நம்பாது அவர்களை வைத்து பேரம் பேசிய புலிகளின் தோல்வியை, தோல்வியாக ஏற்கமுடியாது. மாறாக இது அவர்களின் அழிவு நிலையாகவே காணப்பட வேண்டும். இந்த அழிவு நிலை ஏன் உருவான என்பதை விமர்சிக்காது அதனை பாதுகாத்தால், மீளவும் இதே அனுபவத்தை தான் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள நேரும்.

புலிகள் இயக்கதில் இருந்தவர்களையும், புலிகளை நேசித்தவர்களையும் விட்டு விட்டு புதிய போராட்டம் சாத்தியமற்றது. எனவே புலிகளின் கடந்த காலத்தினை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது போராட கூடிய சக்திகளை அந்நியப்பட்டு போகச் செய்கின்ற செயற்பாடுதான் இது. புலிகளின் மக்கள் விரோத அரசியலின் கடந்த கால செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதனை கைவிடுங்கள் என கோரிக்கை வைக்கின்றனர் தம்மை முற்போக்கு சக்திகள் எனக் கூறுபவர்கள். இது தவறான பார்வையும் அதேவேளை மாற்றுக்கருத்தாடல்களுக்கான முரணான செயற்பாடும் சந்தர்ப்பவாதப் போக்குமாகும்.

புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் அல்லது புலி சார்பானவர்கள் மீளவும் போராட வேண்டுமானால் முதலில் அவர்கள் ஏன் புலி தோற்றது? என்ற கேள்விக்கான பதிலை தேட முற்படவேண்டும். அப்போது தான் அவர்களிடம் மக்கள் விடுதலைப் போராட்டம் பற்றிய பார்வை ஏற்படும். மேலும் புலிகளின் குணாம்சங்களில் ஒன்றான மற்றுக் கருத்தை எம்போதும் அரசின் கருத்தாக கொள்ளும் பார்வை அற்றுப் போகும் போதே இவர்கள் மீளவும் மக்களுக்கான உண்மையான விடுதலைக்கு போராட முற்படுவார்கள். இந்த மாற்றம் நிகழாதவிடத்து மீண்டும் புலிப்பாணியிலான போராட்டமே முன்தள்ளப்படும்.ஒருசில முன்னாள் புலி உறுப்பினர்கள் கூறும் கூற்று தமது கண்முன்னே தனது சக போராளி இறந்தான், ஆனால் இவர்கள் சும்மா இருந்து கொண்டு விமர்சிக்கிறார்கள் என்பது முற்றிலும் அரசியல் புரிதலற்ற கூற்று.சரியான விடுதலைப் போராட்டத்தை நடத்தாத புலிகளில் அனாவசியமாக கொடுக்கப்பட்ட உயிர்களில் அக்கறை கொண்டவர்களே புலிகளை விமர்சித்தனர். மாற்று கருத்துக்களை செவிசாய்க்க மறுத்ததும் ,ஆயத்தம் மட்டும் இருந்தால் போராட்டம் வெற்றி பெறும் என்ற மூட நம்பிக்கையை புலி துறக்காததால் தான் இன்று அழிந்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை மையமாக வைத்துத்தான் புலிகள் தமது செயற்பாடுகளை செய்யபுறப்பட்டனர். அதில் ஒரு இயக்கம் தான் போராட வேண்டும், மற்றைய இயக்கங்கள் அழிக்கப்பட வேண்டும், பாராளுமன்றவாதிகள் கொல்லப்பட வேண்டும். ……. இவ்வாறு பல. இது முற்றிலும் தவறான கருத்தும் புரிதலுமே. அதாவது மக்களிடம் இருந்து ஒன்றையும் புலிகள் பெற்றிருக்கவில்லை மாறாக புலிகளிடம் உள்ள கூற்றை மக்களிடம் ஆயதத்தின் மூலம் திணித்தனர். அது பின்னர் ஒரு கூற்றாக மாறியது.புலி என்றும் மக்களின் கருத்தை கேட்டதோ இன்றி புலி உறுப்பினர்களுடைய கருத்துக்களையோ கேட்டதோ கிடையாது. தலைமை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றும் கூலிப்படையாகத் தான் சாதாரண புலி உறுப்பினர்கள் வைக்கப்பட்டிருந்தனர். ஜனநாயகத்தையும் புலிகளின் மக்கள் விரோதப் போக்கினையும் கேள்வி கேட்ட பல புலி உறுப்பினர்கள் போராட்ட களங்களில் பின்னால் இருந்து தலைமையின் உத்தரவுகளுக்கமைய சக பேராளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் புலிகளிடமிருந்து தப்பி ஓடினர்.

நாம் போராடி தமிழீழம் பெற்றுத் தருவோம் நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் போதும். அதுவும் வாய் திறக்காமல் இருந்தால் போதும் என்று கூறி செயற்பட்டவர்கள் தான் புலிகளின் தலைமை. இது தான் புலிகள் அழியும் வரை நடந்தது. ஏன் புலிகளில் இறந்தவர்களை நினைவு கூறும் “மாவீரர் தின” நிகழ்வுகள் உண்மையில் உணர்வு பூர்வமாகவா நடைபெறுகின்றது? இல்லை மாறாக ஆடம்பரமாகவும் ஒரு கொண்டாட்டமாகவுமே நடைபெறுகின்றது. இதை வைத்து பணத்தையும் சாம்பதிக்கின்றனர். இவ்வாறு தான் மக்களை பார்வையாளர்களாகவும் தம்மை கதாநாயகர்களாகவும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.மக்களை நேசிப்பவர்களும் மக்களுக்காக போராடுபவர்களும் உண்மையை கூறுபவர்களும் எப்போதும் ஒரே நோர்கோட்டில் பயணிப்பர். மற்வர்கள் எல்லாம் தமது நலனுக்கு எற்ப தம்மை மாற்றிக் கொள்வார்கள் இது தான் உண்மை.உண்மையான விடுதலைக்காய் போரட வேண்டின், விமர்சனங்கள் அற்ற போராட்டம் சாத்தியமற்றதே.

pallavar.blogspot.com/ aug 9 2018

Published in Tamil

05 09 2018

விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு

இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது.எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது.ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அதை அவர் ஓரளவுக்கு வெளிப்படுத்தவும் செய்தார். எனினும், எந்தவொரு கட்டத்திலும் விக்னேஸ்வரனை கூட்டமைப்பை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கிற நிலைக்கு, அவர் வரவில்லை. விக்னேஸ்வரனை வெளியேற்றாமல் தவிர்த்தமைக்கு, இரண்டு காரணங்கள் உண்டு.

முதலாவது, விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அணியொன்று, தமிழ்த் தேசிய அரசியலில், கூட்டமைப்புக்கு எதிராக வளர்வதை, அவர் விரும்பவில்லை.இரண்டாவது, கூட்டமைப்பு - விக்னேஸ்வரன் முரண்பாட்டின் போது, கொழும்பிலுள்ள மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரின் தலையீடும், சமரச முயற்சியும் இருந்தமையாகும்.‘தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்தவர். மற்றும், 2009 பின்னடைவுக்குப் பின், தமிழர் அரசியலைக் கட்டிக்காத்தவர்’ என்கிற அடையாளங்கள் தன்னுடைய காலத்துக்குப் பின்னும், தன்னோடு தொடர வேண்டும் என்பதையே சம்பந்தன் விரும்புகிறார். அரசியல் தீர்வுக்கான முயற்சிகள், கிட்டத்தட்ட முடங்கிப் போய்விட்டன. இவ்வாறான நிலையில், கூட்டமைப்பில் ஏற்படும் பிளவு, புதிய அணியொன்றின் எழுச்சிக்கு, வித்திட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார்.விக்னேஸ்வரன் பிரச்சினையில் அவர், இன்றளவும் உறுதியான முடிவொன்றுக்கு வரமுடியாமல்த் தவிப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். ஆனால், வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிய, இன்னும் இருப்பது ஒரு மாதமேயாகும். எப்படியும் அடுத்த வருடத் தொடக்கத்தில், தேர்தலொன்றைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியான நிலையில், இறுதி முடிவொன்றை அவர் எடுக்காமல், அதிக காலம் ஒத்திவைக்க முடியாது.

சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான நெருக்கம் என்பது, அரசியல் சார்ந்தது மட்டுமல்ல; அது, வாழ்க்கை நிலை சார்ந்தது. அதுவொரு வகையில், மேட்டுக்குடி நெருக்கம்.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராகக் கொண்டு வந்தது சம்பந்தனும், எம்.ஏ. சுமந்திரனும் என்று வெளியில் தெரிந்தாலும், அவர்கள் இருவரும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை, இணங்கச் செய்யும் கருவிகளாகவே, பெரும்பாலும் இருந்தார்கள்.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் நெருக்கமான, கொழும்பிலுள்ள மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் அண்மையில் மறைந்த மூத்த சட்டத்தரணி ஆகியோரின் தலையீடுகளே, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கியது. அதுதான் கூட்டமைப்பில், இரண்டாம் கட்டத் தலைமையொன்று வடக்கிலிருந்து உருவாகுவதையும் தடுத்தது.

சுமந்திரனை நேரடி அரசியலுக்கு அழைத்து வரும் போது, சம்பந்தனிடம் இருந்தது, தமிழ்த் தேசிய அரசியலைத் தென்னிலங்கையோடும் சர்வதேசத்தோடும் தன்னோடு இணைந்து கையாள்வதற்கான நபர் ஒருவரின் தேவையாகும். அதைச் சுமந்திரன் குறிப்பிட்டளவு நிறைவேற்றினார். அதுமட்டுமல்லாது, கட்சி அரசியல் சார்ந்தும் அவர் முன்னேறி வந்தார்.ஆனால், விக்னேஸ்வரனை வடக்கு அரசியலுக்கு கொண்டுவரும் போது, ஆயுதப் போராட்ட அடையாளமற்ற, மும்மொழிப் புலமையுள்ள ஒருவரின் அவசியம் இருப்பதாக சம்பந்தன் நம்பினார். அத்தோடு, எந்தப் பிரச்சினைகளையும் செய்யாது, தான் சொல்வதைக் கேட்டுச் செய்யும் கிளிப்பிள்ளையாக, விக்னேஸ்வரன் இருப்பார் என்றும், அதற்குத் தனக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான நட்பும், மேட்டுக்குடி உறவும் துணையாக இருக்கும் என்றும் நினைத்தார்.ஆனால், விக்னேஸ்வரன் கிளிப்பிள்ளையாக இருக்கும் கட்டத்திலிருந்து, அதிகார தலைமைத்துவ அரசியல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்தார். குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி குறித்த, அவரது இலக்கு பொய்த்த புள்ளியில், தன்னை ஒரு கலகக்காரராக மாற்றினார். கூட்டமைப்பை நோக்கிக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அது, இன்றைக்கு விக்னேஸ்வரனை தற்போதுள்ள இடத்துக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது.

சம்பந்தனுக்கு, விக்னேஸ்வரனின் பலவீனமும், விக்னேஸ்வரனுக்கு சம்பந்தனின் பலவீனமும் தெரியும் என்பதுதான் இறுதி முடிவொன்று அடையப்படாமல், கூட்டமைப்பு - விக்னேஸ்வரன் முரண்பாடுகள் நீள்வதற்குக் காரணமாகும்.தான் என்ன செய்தாலும், கொழும்பிலுள்ள மூத்த ஜனாதிபதி சட்டத்தரணியைக் கொண்டு சம்பந்தனைக் கையாளலாம் என்பது விக்னேஸ்வரனின் எண்ணம். கூட்டமைப்போடு முரண்படத் தொடங்கிய கடந்த மூன்று வருட காலத்தில் அதுவே, விக்னேஸ்வரனைக் காப்பாற்றி வந்த காரணிகளில் முக்கியமானது.விக்னேஸ்வரனால் தனிக் கட்சியொன்றை ஆரம்பிக்கப்பட்டாலும், யாழ்ப்பாணம் தாண்டி ஒரு தலைவராக அடையாளம் பெற முடியாது என்கிற நிலை, விக்னேஸ்வரனின் பெரிய பலவீனமாகும். அதை வைத்துக் கொண்டு, அவரைக் கையாள வேண்டும் என்று சம்பந்தன் நினைக்கிறார். அதாவது இருவரும், ஒருவர் மற்றொருவரின் பலவீனங்களின் வழி, பயணம் செய்ய நினைக்கிறார்கள்.

ஆனால், சம்பந்தனின் நிலைப்பாடுகள், எண்ணங்களைத் தாண்டி, தீர்க்க முடியாத கட்டத்தை கூட்டமைப்புக்கும் (நேரடியாகச் சொல்வதானால், தமிழரசுக் கட்சிக்கும்) விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் எட்டிவிட்டன.கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக் கூட்டங்களிலோ, தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்களிலோ அனைவரையும் பேசவிட்டு, இறுதியாகத் தன்னுடைய முடிவை மறுதலிக்க முடியாத அளவுக்கு முன்வைப்பதில் சம்பந்தன் கில்லாடி. அவர் அப்படித்தான் இதுவரையும் விடயங்களைக் கையாண்டும் வந்திருக்கின்றார்.ஆனால், விக்னேஸ்வரன் பிரச்சினையில், சம்பந்தன் நிலைப்பாடுகளை, அவர் எதிர்பார்க்காத அளவிலேயே மறுதலிக்கும் நிலைப்பாடொன்று, தமிழரசுக் கட்சிக்கு உண்டு. குறிப்பாக, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் அந்தக் கட்டத்தை எப்போதோ அடைந்துவிட்டார்கள்.

ஜனாதிபதி செயலணியின் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி, விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தை, நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே சம்பந்தன் வாசித்துக் காட்டி, முடிவைக் கேட்கும் நிலையொன்று காணப்பட்டது.கூட்டமைப்பின் குழுக் கூட்டங்களின் போது, சம்பந்தனுக்கு முன்னால், மற்றவர்களின் குரல் பெரும்பாலும் உயர்வதே இல்லை. சுரேஷ் பிரேமசந்திரன் இருக்கும் வரை, ஓரளவுக்கு விமர்சனப் பாணியை முன்னெடுப்பார். அதுவும் கூட, ஒரு வகையில் இறைஞ்சும் தன்மையை ஒத்திருக்கும். ஆனால், இன்றைக்கு சம்பந்தன் எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டமைப்புக்குள் இருப்பவர்களின் குரல் உயர்ந்துவிட்டது. அவரால் சமாளிக்க முடியாத கட்டமொன்று மெல்ல ஏற்பட்டிருக்கின்றது.விக்னேஸ்வரனைத் தொடர்ந்தும் வடக்கு மாகாண சபைக்குள் தக்க வைப்பதன் மூலம், கூட்டமைப்பில் உடைவு ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றும், தனக்கு நிகராக இன்னொரு தலைமை தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் உருவாவதைத் தடுக்க முடியும் என்று சம்பந்தன் நினைக்கிறார்; அதன்போக்கில் அவர் இயங்கவும் நினைக்கிறார்.

ஆனால், அவரது நிலைப்பாடுகளுக்கு அப்பாலான யதார்த்தம் ஒன்று இருக்கின்றது. அது, கூட்டமைப்பின் எதிர்காலம் சார்ந்தது மட்டுமல்ல, தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் சார்ந்ததுமாகும்.ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் சம்பந்தனுக்குப் பின்னரான தலைமை என்பது, கேள்விக்குறியாக மாறிவிட்டது. இரண்டாம் கட்டத் தலைமையொன்றுக்கான அங்கிகாரம் இன்னமும் பெரிய அளவில் உருவாகியிருக்கவில்லை. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தமட்டில் சுமந்திரன் போன்றவர்கள் உருவாகி வந்தாலும், அவர்களை வடக்குக்குள் அல்லது கிழக்குக்குள் மாத்திரம் அடங்கி விடுதல் என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் பின்னடைவாக இருக்கும்.அப்படியான கட்டத்தில்தான், நிர்வாகத்திறமையும் அரசியல் கையாளுகையுமுள்ள இரண்டாம் கட்டத் தலைமைகளை வடக்கு - கிழக்கிலிருந்து உருவாக்கியிருக்க வேண்டும். அதனை, விக்னேஸ்வரனை முன்னிறுத்தி கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்தாவது பெற்றிருக்கலாம். அதனைவிட்டு, விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள், வடக்கு அரசியலில் மாத்திரமல்ல, தமிழர் தாயக அரசியலிலேயே ஆரோக்கியமற்ற தன்மையையே தக்க வைத்திருக்கும்.

சம்பந்தன், விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா மூவருமே 75 வயதைத் தாண்டியவர்கள். இவர்களுக்கு அப்பால் சொல்லிக் கொள்ளக் கூடிய தலைவர்களாக கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் ஒரு சிலரே.அப்படியான நிலையில், மூத்தவர்கள் புதிய தலைமைகளை உருவாக்குவதும், இரண்டாம் கட்டத் தலைமைகளுக்கு வழிவிடுவதுமே ஆரோக்கியமானது. அதைச் செய்ய வேண்டிய கட்டத்தில் சம்பந்தன் இருக்கிறார். அதன்போக்கில், அவர் விக்னேஸ்வரனை விடுவிப்பதுதான் சிறந்தது. 

புருஜோத்தமன் தங்கமயில் / tamilmirror.lk  2018 ஓகஸ்ட் 29 

Published in Tamil