தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா?
30 11 2019
தமிழர் அரசியல் ஆரோக்கியமாகுமா?
தேர்தலுக்குப் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, தத்தம் தரப்பு நியாயங்களைப் பட்டியல்படுத்தி, அவற்றை மெய்ப்பிப்பதற்கான முயற்சிகளில், ஏட்டிக்குப் போட்டியாக ஈடுபட்டு வருவதைக் காணமுடிகிறத. இவை யாவும் 'அறிக்கை அரசியல்' என்ற பழைய மொத்தையில் கள்ளருந்தும் கலாசாரமாகவும் புளித்துப்போன உப்புச்சப்பற்ற வியாக்கியானங்களாகவுமே காணப்படுகின்றன.இத்தகைய போக்குகள், தமிழ்த் தேசிய இருப்பின் ஊடாகச் சமகால அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லாத நிலைமையை, குறைபாட்டையே வௌிப்படுத்தி நிற்கின்றன.வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அதன் பங்காளிக் கட்சிகளிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்வினையாகச் செயற்படும் ஏனைய கட்சிகளிடமும் தூரநோக்குப் பார்வையோ தரிசனமான திட்டங்களோ காணப்படவில்லை.
இந்த நிலைமையானது, தமிழ்த் தேசிய அரசியலில் ஆரோக்கியமான சூழலாகத் தெரியவில்லை. அரசியல் விடுதலை குறித்த தமிழரின் பயணத்தில், தமிழ் மக்களும் அவர்களின் தலைமைகளின் அரசியல் காய்நகர்த்தல்களும் சொல்லொண்ணா ஏமாற்றங்களையும் துயரங்களையும் சந்தித்துள்ள சம்பவங்களையே, வரலாற்றில் தொடர்ச்சியாகக் காணமுடிகின்றன.'காலம் கடந்த ஞானம்' வேண்டியதொரு காலகட்டத்தில், தமிழ்த் தேசிய இனமும் அதன் அரசியல் தலைமைகளும் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இன்னும் முழுவதுமாக வர முயற்சியாமல் இருப்பது, மிக மிக அபத்தமானது.
தமிழ் மக்கள், தமது வாழ்வாதாரத் தேவைகளையும் அடிப்படை உரிமைகளையும் குறைந்தபட்சம் ஒரு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில், அதிஉயர் அதிகாரப் பகிர்வின் மூலம், தமது அரசியல் உரிமையை வேண்டி நிற்கின்றனர் என்பதை, தாமாக முன்வந்து, ஒரு சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாஸ முன்வைத்த தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.இதன் மூலம், இத்தீவில் அனைத்து மக்களும் ஒருதாய் மக்களாகச் சம அந்தஸ்துடன் வாழ, வழி பிறக்கும் என்று நம்பினர். மாறாக, இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்கள், இனவாதம் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேசிய பலம்பொருந்திய வேட்பாளர்களில் ஒருவரைத் தமிழ் பேசும் மக்கள் ஆதரித்தனர். ஜனநாயக நாட்டின் பிரஜைகள் என்ற வகையில், தமக்குரிய ஜனநாயக உரிமைகளும் சுதந்திரமும் என்ற அடிப்படையில், தமக்குப் பிடித்த ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆதரித்தனர். இவை தவிர, இதற்கு இனவாதம் பூசுவது பொருத்தமற்ற ஒரு நடவடிக்கையும் தவறான பார்வையுமாகும்.இத்தகைய நடவடிக்கைகள், அதிருப்தி உணர்வுகளை மேலும் அதிகரிக்கச் செய்யுமே தவிர, வேறு எதையும் சாதித்து விடாது. எனவே, பிளவுபட்ட சமூகங்களை இணைப்பதைத் தவிர்த்து, தொடர்ச்சியாகப் பிளவுபட்ட பாதையில் பயணிக்க முயல்வது, தேசத்துக்கு ஆபத்தாகவே முடியும்.எனவே, புதிய ஜனாதிபதி இத்தகையதொரு கரடுமுரடான பயணத்தை மேற்கொள்ள மாட்டார். ஏனெனில், அத்தகைய பயணம், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்ற முடியாத சிக்கல் நிலையைத் தோற்றுவிப்பதுடன், இந்நாட்டைச் சர்வதேசத்திடம் இருந்தும் ஒதுக்கிவிடக்கூடிய அபாயங்களையும் சந்திக்கும்.
ஏனெனில், இலங்கை அரசியலில் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளைக் காரணம் காட்டியே, பல்வேறு நாடுகளின் அரசியல் காய்நகர்த்தல்களும் வியூகங்களும் அமைந்துள்ளன. இத்தகைய சிக்கல் நிறைந்த அணுகுமுறைகளில் இருந்து விடுபடுவதன் மூலம், அரசாங்கம் நேர்மையான வழிகளில், தமது ஆட்சி அதிகாரத்தை முன் நகர்த்த முடியும். இல்லையேல், பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிவரும்.இலங்கையின் பொருளாதாரம், நம்பிக்கை தரும் அளவில் இல்லை; இத்தகையதொரு சூழ்நிலையில், கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏழாயிரம் நியமனங்கள், அதிகரிக்கப்பட இருந்த சம்பளம், முகாமைத்துவக் கொடுப்பனவுகள் யாவும் இடை நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலைமைகள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சிக்குச் சிக்கலைத் தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைப் பற்றிய உணர்வலை மேலோங்கியதால், வயிற்றைப் பற்றிச் சிந்திக்கத் தவறிய மக்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதைப்பற்றி சிந்திக்க முற்படுவர். இது தேர்தலில் ஆளும் தரப்புக்கு முக்கிய பிரச்சினையாக மாறும்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலில், "நாட்டைக் காப்பாற்றியவர் ராஜபக்ஷ" என்ற அனுதாபம், சிங்கள மக்களின் இருந்தது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில், இந் நிலைமைகள் இல்லை.ஏனெனில், தொகுதி வாரியான பிரதிநிதிகள், மாவட்டப் பிரதிநிதிகள், தனியாள் செல்வாக்கு, கட்சிச் செல்வாக்கு எனப் பல்வேறு சக்திகள் செல்வாக்குச் செலுத்தும் நிலைமை காணப்படும்.இத்தகைய நிலையில், தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என நோக்கின், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, மாற்றுத் தலைமை ஒன்றை, சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில், சுரேஷ் பிரேமசந்திரன், ஸ்ரீகாந்தா, அனந்தி சசிதரன் போன்றவர்களை இணைத்துக்கொண்டு, ஓர் அரசியல் கட்சியை ஸ்தாபிக்கும் முயற்சிகள், வடக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த முயற்சிகள், தமிழ்த் தேசிய உணர்வின் உந்துதலால் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னெடுக்கப்படுகிறதா? என்பதை மேற்படி கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும்.
ஏனெனில், இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமே முகவரி பெற்றவர்கள். தற்போது இவர்கள், கூட்டமைப்பை விட்டு விலகியதால், நிராகரிக்கப்பட்டவர்கள். தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துச் செயற்பாடுகளையும் விமர்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.மேலும், வடக்கின் கள நிலைவரங்களின் படி, அங்கு வெற்றி பெற முடியாத சூழலில், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வேலைத்திட்டத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர். இதன் மூலம், தமிழரது வடக்கு மாகாணப் பிரதிநிதித்துவத்தை, தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.மேலும், இவர்கள் கிழக்கின் அரசியல் நிலைவரங்களை அடியோடு கவனத்தில் கொள்ளவில்லை. அங்கு, மேற்படி கட்சிகளுக்கு ஆதரவுத்தளம் அமைப்பு ரீதியாக இல்லை. இத்தகைய சூழலில் மாற்றுத் தலைமை எனக் கூறிக்கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலில் போட்டியிடும் போது, பல விபரீதங்கள் ஏற்படலாம்.
வடக்கின் அரசியல் நிலைமைகள் வேறு; அங்கு பெரும்பான்மைச் சமூகம், தமிழ்ச் சமூகமாகும். ஆயினும், தமிழர் அபிலாசை தொடர்பாகக் குரல் கொடுப்பதாக இருந்தாலும் பிரிந்து நின்று குரல் கொடுப்பதாக இருந்தாலும் அங்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்பில்லை.ஆனால், கிழக்கை பொறுத்தவரையில் இது ஒரு விசப்பரீட்சை. குறுகிய அரசியல் இலாபங்களுக்காக, விரக்தியுற்ற ஒவ்வொருவரும் தமது போக்குக்கு ஏற்ப, ஒவ்வொரு கட்சியை தொடங்குவது சுலபமாக இருக்கலாம். ஆனால், கிழக்கு மக்களது வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், கிழக்கின் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது.தவிர, இவர்களால் கிழக்கில் ஒரு பிரதிநிதித்துவத்தைக் கூடப்பெற முடியாது. ஏனெனில், எத்தகைய அரசியல் வேலைத் திட்டங்களோ, மக்கள் படையோ இவர்களுக்கு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் களத்தில் குதித்துள்ள தேர்தல்கால பூச்சாண்டி பூதங்களாகவே மக்களால் பார்க்கப்படுவர்.
ஆயினும், எதிர்காலத்தில் தமிழர் இருப்பின் நலன் கருதி, ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ், இணக்கப்பாட்டு அரசியலில் இனவாதமற்ற, முற்போக்குச் சிந்தனையுள்ள கட்சியுடன் இணைந்து, தமிழ்த் தேசியத்தின் அடையாளத்தையும் பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும்.தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தின் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்த இலட்சியப் பயணத்தின் தேசிய இலக்கினை அடையும் வரையில், இந்தப் போராட்டம், 'போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் மாறாது' என்ற கொள்கை அடிப்படையில், தமிழ் மக்களது தேசிய அபிலாசைகளை வெற்றிகொள்ள, தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய அரசியலில் ஓரணியில் ஒன்றுபட வேண்டியது, காலத்தின் தேவை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த சதவீதத்தை விட, மேலும் அதிகளவில் வாக்களிக்க வேண்டிய கடமையும் ஜனநாயகப் பொறுப்பும் தமிழ் மக்களுக்கு உண்டு. எனவே, தமிழ் மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய, அதிகளவில் வாக்களிக்கவேண்டும்; வாக்குச் சிதறடிப்பவர்களை இனங்கண்டு, நிராகரிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலில், கிழக்கு நிலைவரத்துக்கு ஏற்ப, போட்டி தவிர்த்து, ஓரணியில் தமிழர் திரள வேண்டும்.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஐ.தே.க சார்பாகச் செய்யப்பட்டது போல், இம்முறையும் நிலைவரத்துக்கு ஏற்ப, ஆட்சியில் பங்குதாரராக வேண்டிய தேவை உள்ளது. அந்தவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பேரம் பேசும் சக்தியாகத் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவதுடன் அதிகபட்ச பிரதிநிதித்துவம் உள்ள கட்சியுடன் சேர்ந்து, ஆட்சியில் பங்காளராக வருவதன் மூலமே தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசைகளை, இணக்கப்பாட்டு அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம், முன்னோக்கி நகர்த்த முடியும்.எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் ஐந்தாண்டு காலத்துக்கான வடக்கு, கிழக்கு அரசியல், அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, கல்வி, வாழ்வாதார வேலைத்திட்டங்களை மக்கள்முன் தெளிவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதை விடுத்து, கடந்தகால அரசியல் நாடகங்களை முன்னெடுப்பது, ஆரோக்கியமான ஒரு பயணமாக அமையாது.
இலட்சுமணன்tamilmirror.lk 28 11 2019
இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?
19 11 2019
இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின் அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:
கேள்வி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?
பதில்: கடந்த ஏப்ரலில் அங்கு குண்டுவெடிப்புகள் நடந்தபோதே, அங்கு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தீர்மானமாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த 2009ல் புலிகளை வெற்றிகொண்டதிலிருந்து, தேசப் பாதுகாப்பு என்ற விஷயம் என்பதில் அவரைத் தவிர வேறு யாராலும் உரிமை கொண்டாட முடியாத விஷயமாகவே இருந்தது.
ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் நடந்தன. 27ஆம் தேதியே கோட்டாபய தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார். அப்போது அவருடைய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனகூட இதை முடிவுசெய்யவில்லை. மே மாதம் நான் மஹிந்தவைச் சந்தித்தபோதுகூட அவர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், கோட்டாபய ஏப்ரலிலேயே பணிகளைத் துவங்கிவிட்டார். கோட்டாபய பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர். போரை வழிநடத்தியவர். ஆகவே ஏப்ரல் 21க்குப் பிறகு இந்த விஷயம்தான் மக்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் பெருகிவந்தன. அதனால், தற்போதைய அரசைச் சேர்ந்த யாரும் வெல்ல முடியாத சூழலும் உருவானது.
35 ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதான வேட்பாளர்கள் இருவர். ஒருவர் கோட்டாபய. மற்றொருவர் சஜித் பிரேமதாஸ. ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித், தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஆனால், பொருளாதார ரீதியில் சாதித்தவர் அல்ல. கோட்டாபயவைப் பொறுத்தவரை, அவர் போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற பெயர் இருக்கிறது.
தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சிங்களர்கள் எல்லாம் திரண்டுவந்து கோட்டாபயவுக்கு வாக்களித்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம் இருவருமே இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். சிங்களர்களைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்கக்கூடியவர் கோட்டாபயதான் என முடிவுசெய்தார்கள்.
கே. ஈஸ்டர் தாக்குதலின் காரணமாக, பாதுகாப்பு குறித்த அச்சத்தில் சிங்களர்கள் கோட்டாபயவுக்கு வாக்களித்தார்கள் என்றால், சிறுபான்மையினருக்கு அந்த அச்ச உணர்வு ஏன் ஏற்படவில்லை அல்லது அவர்கள் ஏன் அதனை முதன்மையாக நினைக்கவில்லை?
ப. தமிழ் பகுதிகளில் புலிகள் இருந்தபோது, அவர்கள் தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள். 2009க்கு முன்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து ஒருவர் அழைத்துச் செல்லப்படுவது, விசாரணைக்காக சிறையில் வைக்கப்படுவது என்பது கிடையாது. அதன் நீட்சியாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் பார்க்கிறார்கள். கூட்டமைப்பைப் பொறுத்தவரை, நாம் யாரை விரும்புகிறோம் என்பதைவிட, யார் வேண்டாம் என்பதில்தான் முடிவெடுக்க முடிகிறது. அந்த அடிப்படையில் பல தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த, காணாமல் போக காரணமாக இருந்த கோட்டாபய வரக்கூடாது என்பதில் மக்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
- சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு
- இலங்கை தேர்தல்: கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆதரவு பெற்றது எந்தப் பகுதியில்?
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். டெலோவைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென நினைத்தார். ஆனால், மக்கள் அவரை விரும்பவில்லை. அதேபோல வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் இம்மாதிரி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.
கோட்டாபய, சஜித் ஆகிய இருவரில் யார் வந்தாலும் தமிழர்களுக்கு ஏதும் செய்வதாகத் தெரியவில்லை; மக்கள் தங்கள் மனசாட்சியின்படி முடிவெடுக்க வேண்டுமென அவர் கூறினார். இது கோட்டாபயவுக்கு சாதாகமான ஒரு விஷயம். ஆனால், அதையும் மக்கள் ஏற்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இன்றைக்கும் தமிழ் மக்களின் பாதுகாவலனாக இருக்கிறது என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லியிருக்கின்றன.
கே. இந்தத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் இனரீதியாக பிளவுபட்டு வாக்களித்திருப்பதைப் போலத் தெரிகிறது. ஆகவே இந்தப் பிளவானது தற்போதைய ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாக முடிவெடுப்பதில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?
ப. அதிகாரப் பகிர்வு என்பது இனி இலங்கையில் நடக்காது. 13வது திருத்தச் சட்டம் என்பது இனி ஒருபோதும் நிறைவேறாது. நாம் இனி யதார்த்தமான தீர்வுகளைப் பற்றி மட்டுமே பேசப்போகிறோம் என கோட்டாபய மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆகவே, அவருடைய தீர்வில் 13வது திருத்தச் சட்டம், மஹிந்த கூறிய 13வது திருத்தச் சட்டம் ப்ளஸ் ஆகிய எதுவுமே கிடையாது. கோட்டாபயவைப் பொறுத்தவரை, ஒரு ஒருங்கிணைந்த நாட்டிற்குள் தமிழர்கள் வேண்டுமென்றால் இருந்துகொள்ளலாம், அவ்வளவுதான். அதுதான் நிதர்சனம். இதில் இந்தியா செய்யக்கூடியது ஏதுமில்லை.
- இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?
- இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம்
கே. கோட்டாபய பதவியேற்ற பிறகு பேசும்போது சிங்கள மக்களின் வாக்குகளால்தான் வெற்றிபெற்றதாகத் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இனி தமிழ் மக்கள், சிறுபான்மையினரைப் பொறுத்தவரை ஜனாதிபதியை அணுகுவதென்பது எவ்விதத்தில் இருக்க முடியும்?
ப. அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக இருக்க வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 13 கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஆரம்பிக்கலாம். தமிழர்கள் என்ன கேட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷ கொடுக்கப்போவதில்லை. ஆனால், ஐநா, ஐநா மனித உரிமைகள் சபை, ஊடகங்களிடம் தமிழர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து பேச வேண்டும்.
கே. விரைவிலேயே நாடாளுமன்றத் தேர்தலும் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேர்தலின் முடிவுகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்குமா?
ப. நிச்சயமாக எதிரொலிக்கும். தமிழ்ப் பகுதிகள் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்பார்கள். இஸ்லாமியக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ் போன்ற இஸ்லாமியக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். மத்திய இலங்கையில் சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரசிற்கு சில இடங்கள் கிடைக்கலாம். இலங்கைப் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்கள் வாக்காளர்களால் தேர்வுசெய்யப்படும். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் எனப்படும் நியமன இடங்கள். இதில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
விரைவிலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்கக்கூடும். ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சித் தலைவராகலாம். ஆகவே, 2005ல் என்ன நடந்ததோ, அதுதான் நடக்கும். மறுபடியும் அதே அவலங்கள்தான் நடக்கும்.
கே. 2005-2015ஆம் ஆண்டுகளில் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் அதிகமாக இருந்தன. இந்த முறை அதெல்லாம் மாறக்கூடுமா?
ப. அப்படி நடக்கப்போவதாகத் தெரியவில்லை. முன்னாள் ராணுவத் தளபதியான கமல் குணரட்னேவை பாதுகாப்புச் செயலராக நியமித்திருக்கிறார்கள். சரேந்திர சில்வா ராணுவத்தின் தலைமை கமாண்டோ. கோட்டாபய பாதுகாப்பு செயலராக இருந்தவர். ஆகவே, 2005-2015வரை இருந்த அதே கட்டமைப்பு இப்போதும் தொடரப் போகிறது. எதுவும் மாறப்போவதில்லை.
கே. முந்தைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?
ப. சந்திரிகா குமாரதுங்கவைப் பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட ஓய்வில்தான் இருக்கிறார். 2015ல் இவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பதற்காக அவர் மீண்டும் முன்னணிக்கு வந்தார். அதற்குப் பிறகு அரசுக்குள் ஏற்பட்ட குழப்பங்களைப் பார்த்து விலகிக்கொண்டுவிட்டார். பிறகு, இந்தத் தேர்தலின்போது ஒரே ஒரு அறிக்கையே வெளியிட்டார். அவ்வளவுதான். அந்த பாணியில்தான் இனி அவர் தொடர்வார்.
மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை அவருக்கென மிகப் பெரிய பங்களாவை அரசு ஒதுக்கியுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. அவர் ஒரு மூத்த நபடாளுமன்றவாதியாக நடத்தப்படுவார்.
- இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா?
- கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன? அது இனவாதத்தின் வெற்றியா?
கே. கோட்டாபய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார். இனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலை என்னவாகும்?
ப. இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். 2015ஆம் ஆண்டின் இறுதியில்தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி துவங்கப்படுகிறது. ஜி.எல். பீரீஸ் அதன் தலைவராக இருக்கிறார். 2018வரை மஹிந்த அந்தக் கட்சியிலேயே இல்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கட்சிக்குப் பெரும் வெற்றி கிடைக்கிறது. மக்கள் தம் கட்சியை விரும்புகிறார்கள் என்று தெரிந்தவுடன் மஹிந்த பொதுஜன பெரமுனவில் சேர்கிறார். அதைத் தன் கட்சியாக மாற்றிக்கொள்கிறார். அதற்கு அடுத்த ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கிறது.
இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தவரை இரு கட்சிகள்தான். ஒன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. மற்றொன்று ஐக்கிய தேசியக் கட்சி. மூன்றாவது கட்சிக்கு அங்கு இடமே கிடையாது. ஆகவே அதே நிலைதான் நீடிக்கப்போகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மீதமுள்ளவர்களும் அங்கே சென்றுவிடுவார்கள். 2010-2014 வரையிலான மஹிந்த அமைச்சரவையில் 99 அமைச்சர்கள் இருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. அதே போன்ற சூழல்தான் இனியும் ஏற்படும். சுதந்திரக் கட்சி என்பது இனி இல்லை என்றே சொல்லிவிடலாம்.
கே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்?
ப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.
தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.
கே. ராஜபக்ஷக்களைப் பொருத்தவரை அவர்கள் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற பிம்பம் இருக்கிறது. இனி என்ன ஆகும்?
ப. நான் ஒரு அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்கிறார் கோட்டாபய. அதாவது இந்தியாவுடனோ, சீனாவுடனோ நெருக்கமாக இருக்கப் போவதில்லை என்றிருக்கிறார். ஆனால், மஹிந்தவைப் பொறுத்தவரை இந்தியா எங்கள் சகோதரன். ஆனால், சீனாவுடன் வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறோம் என்பார். ஆகவே மஹிந்தவின் நிலைப்பாட்டிலிருந்து கோட்டாபயவின் நிலைப்பாடு மாறுபடுகிறது.
தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பாக, சீனாவின் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. எந்த நாட்டிலும் தேர்தல் சமயத்தில் கூட்டு ராணுவப் பயிற்சி நடக்காது. ஆனால், தேர்தல் சமயத்தில் சீனக் கப்பல் அங்கு வந்திருப்பது ஒரு சமிக்ஞையாகத்தான், அதாவது சீனா எந்த நேரத்திலும் வரவேற்கப்படுகிறது என்பதன் சமிக்ஞையாகத்தான் அது பார்க்கப்படுகிறது. BBC tamil 19 11 2019