Easy Facebook Share Button

14 05 2015

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

“இவள் சரி­யான வேலைக் கள்ளி. கோப்­பைகள் கழு­வு­கிற வேலை தன்ரை தலை­யிலை விழுந்­து­விடும் என்று மெல்ல மெல்லச் சாப்­பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்­புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறு­பு­றுத்தாள்.

“இவ­வோடை டின்னர் சாப்­பிடப் போனால் கடைக்­காரன் பூட்டப் போறன் என்று அவ­ச­ரப்­ப­டுத்தி எழுப்­பி­னால் தான் எழும்­புவாள்” என்று நக்கல் அடித்­தவர் “வாய் நோகாமல் சாப்­பிட்டு ஸ்டைல் காட்­டுவா” என நீட்டி முடித்தார். மற்­ற­வர்கள் தவ­றெனக் காரணம் காட்டிப் பேசி­னாலும் நக்கல் அடித்­தாலும் சிலரால் தமது பழக்­கத்தை மாற்ற முடி­யாது. இருந்த­போதும், சில பழக்­கங்கள் நன்­மையும் தரலாம். மெது­வாக உண்­ப­வர்­களில் பலர் மெல்­லிய உடல் வாகி­ன­ராக இருக்­கி­றார்கள்.

மாறாக இன்­றைய உல­க­மா­னது அவ­ச­ரமும் நேர­நெ­ருக்­கடி மிக்­க­தா­கவும் மாறி­விட்­டது. பல்­வேறு பராக்­கு­க­ளுக்கு குறிப்­பிட்ட குறு­கிய நேரத்­திற்குள் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. அதுவும் அமெ­ரிக்கா போன்ற மேலை­நா­டு­களில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இர­சிப்­ப­தற்கோ, நன்கு மென்று தின்­பதற்கோ நேர­மின்றி வாயில் போடு­வதும் விழுங்­கு­வ­து­மாக அடித்துப் பிடித்து ஓடு­கி­றார்கள். இத­னால்­ தானோ என்­னவோ அவர்கள் பெரும்­பாலும் குண்டுப் பீப்­பாக்கள் போலத் தோற்­ற­ம­ளிக்­கி­றார்கள். மெது­வாக உண்ணல் அண்­மையில் செய்­யப்­பட்ட ஒரு ஆய்­வா­னது, ஆறு­த­லாகச் சாப்­பி­டு­வ­தா­னது உடல் நலத்­திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்­கி­றது. 35 அதிக எடை­யுள்­ள­வர்­க­ளையும் 35 சாதா­ரண எடை உள்­ள­வர்­க­ளையும் கொண்டு 2 நாட்­க­ளுக்கு மட்டும் செய்­யப்­பட்ட ஆய்வு பற்­றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்­சி­கையின் ஜன­வரி 2ஆம் திகதி இதழில் வெளி­யா­கி­யுள்­ளது.

அதன் பிர­காரம் சாதா­ரண எடை உள்­ள­வர்கள் ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது வழ­மையை விட 88 கலோ­ரிகள் குறை­வா­கவே உள்­ளெ­டுத்­தி­ருந்­தனர். ஆனால் அதிக எடை­யுள்­ள­வர்கள் 58 கலோ­ரிகள் குறை­வாக உள்­ளெ­டுத்­தி­ருந்­தனர். வேறு­பா­டுகள் இருந்­த­போதும் உட்­கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. உணவின் அளவு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்­தது. ஆறு­த­லாக சாப்­பி­டு­வது என்­பது சுமார் 22 நிமி­டங்­களை எடுத்­தது. விரை­வாகச் சாப்­பி­டு­வது சுமார் 8 நிமி­டங்­களை எடுத்­தது.

ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது அதீத எடை­யுள்­ள­வர்கள் வழ­மையை விட 33 சத­வி­கிதம் அதி­க­மாக நீர் அருந்­தி­னார்­களாம் எனவும் அந்த ஆய்வு கூறி­யது. அதேவேளை சாதா­ரண எடை­யுள்­ள­வர்­களும் சற்றுக் குறை­வாக அதா­வது 27 சத­வி­கிதம் அதி­க­மாக நீர் அருந்­தி­னார்­களாம். சாப்­பிட்டுக் கொண்­டி­ருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்­பிக்கை எங்­களில் பல­ரி­டையே இருக்­கி­றது. உணவு சமி­பாட்டு நொதி­யங்­களை (enzymes) நீர்த்துப் போகச் செய்து சமி­பா­ட­டை­வதைப் பாதிக்கும் என்­பது தவ­றான கருத்­தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்­களை சிறி­ய­தாக்கி கரையச் செய்­வதால் சமி­பாடு துரி­த­மாக்கி விரைவில் உறிஞ்ச செய்யும் என்­பதே உண்­மை­யாகும்.

இந்த இடத்தில் மற்­றொரு விட­யத்­தையும் ஞாப­கப்­ப­டுத்­தலாம். ஒருவர் உணவு உட்­கொள்­கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறு­வ­தற்கு உட்­கொள்ள ஆரம்­பித்த நேரத்­தி­லி­ருந்து சுமார் இரு­பது நிமி­டங்கள் மூளைக்குத் தேவைப்­ப­டு­கி­றது என்­ப­தாகும். இதைத் தவிர ஜப்­பானில் 1700 இளம் பெண்­க­ளி­டையே செய்­யப்­பட்ட மற்­றொரு ஆய்வும் ஆறு­த­லாகச் சாப்­பி­டு­வதால் விரை­வி­லேயே வயிறு நிறைந்த உணர்வு ஏற்­ப­டு­கி­றது என்றும் அதனால் அவர்கள் உள்­ளெ­டுக்கும் உணவின் கலோரி வலு குறை­வா­கவே இருக்­கி­றது எனவும் கூறி­யது. University of Rhode Island செய்­யப்­பட்ட மற்­றொரு ஆய்­வா­னது ஆறு­த­லாக உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 28.4 கிராமை உட்­கொள்­வ­தா­கவும், இடை­ந­டு­வான வேகத்தில் உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 56.7 கிராமை உட்­கொள்­வ­தா­கவும், வேக­மாக உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 88 கிராமை உட்­கொள்­வ­தா­கவும் கண்­ட­றிந்­தது.

நன்­மைகள் இவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆறு­த­லாக உண்­பதின் நன்­மை­களை நாம் சுல­ப­மாக ஊகித்து அறி­யலாம். ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது குறைந்த அளவு கலோ­ரி­களே உள்­ளெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இது ஏன்? விரை­வாகச் சாப்­பி­டும்­போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்­ப­டாது. எனவே அதீ­த­மாக உணவை உட்­கொண்­டு­வி­டு­வார்கள். மாறாக ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது கொஞ்சம் கொஞ்­ச­மா­கவே உணவு உட்­கொள்­ளப்­ப­டு­வதால் ஓர­ளவு உண்­ணும்­போதே 20 நிமி­டங்கள் கடந்­து­விடும். அப்­பொ­ழுது வயிறு முட்­டிப்­போச்சு என்­பது தெரி­ய­வரும். மேல­தி­க­மாக உட்­கொள்ள நேராது. ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது நீர் அருந்­து­வ­தற்­கான வாய்ப்பு அதிகம் கிடைப்­பதால் உணவின் இடையே நீர் அருந்­து­வார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.

நிதா­ன­மாகச் சாப்பிடும்­போது நன்கு மென்று உண்ணக் கூடி­ய­தாக இருக்கும். மென்று உண்­ணு­வதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரி­மானம் எச்­சிலில் ஆரம்­பித்து­ வி­டு­கி­றது. எனவே ஆறு­த­லாகச் சாப்­ப­டும்­போது உணவு நன்கு ஜீர­ண­மாகும். உணவை ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதி­க­ரிப்பு தடுக்­கப்­படும் என்­பது உண்­மையே. ஆறு­த­லாக உண்­ணும்­போது சுவை­களை சப்­புக்­கொட்டி ரசிக்க முடி­கி­றது. வாச­னையை நன்கு நுகர முடி­கி­றது. உணவு தயா­ரிக்­கப்­பட்ட விதத்­தையும் அதன் பதத்­தையும் உணர்ந்து கொள்ள முடி­கி­றது. அதனால் மனத் திருப்தி ஏற்­ப­டு­கி­றது. இதனால் உணவு உண்ணும் செயற்­பா­டா­னது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாக இருக்கும்.

உணவு வேளையை மேலும் மகிழ்ச்­சி­யாக்க நாம் செய்ய வேண்­டி­யது என்ன? இர­ச­னை­யோடு உண்­ணுங்கள் மென்­மை­யான இசையை பின்­ன­ணியில் இசைக்க வையுங்கள். பளீ­ரெனத் தெறிக்கும் ஒளி­களை அணைத்து மெல்­லிய இத­மான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்­பது அற்­பு­த­மான அனு­ப­வ­மாக இருக்கும். வேறு சுவாரஷ்ய­மான விட­யங்­களில் மனத்தைச் செலுத்­தா­தீர்கள். தொலைக்­காட்சி பார்ப்­பது, விவா­தங்­களில் ஈடு­ப­டு­வது போன்­ற­வற்றைத் தவி­ருங்கள். உணவில் மட்­டுமே மனத்தைச் செலுத்­துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுயஉணர்வை மிகைப்­ப­டுத்தி அரிய அனு­ப­வத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்­ளத்தில் கிளர்ச்­சியை ஏற்­ப­டுத்தும். திருப்தி கிட்டும். மற்­ற­வர்­க­ளுடன் சேர்ந்து உண்­ணும்­போது, இடையில் ஒரு சில நிமி­டங்­க­ளுக்கு உண்­பதை நிறுத்தி அவர்­க­ளுடன் சில வார்த்­தைகள் பேசுங்கள். நேரம் கழியும் விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்­டி­விடும். ஆயினும் சுவாரஷ்ய­மான விட­யங்­களை ஆரம்­பித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறி­விடா­தீர்கள்.

நன்கு சாப்­பிட்டு வயிறு நிறைந்­தி­ருக்கும் தரு­ணத்­தில்­தானே பொது­வாக ஈற்­று­ணவு (dessert) வரு­கி­றது. இருந்­த­போதும் ஈற்­று­ணவின் இனிப்பும் நறு­ம­ணமும் நிறைந்த வயிறு நிறைந்­ததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றை சாப்­பிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலை­கீ­ழான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துங்கள். முதலில் ஈற்­று­ணவை சுவை­யுங்கள். கேக் அல்­லது புடிங் போன்ற எது கிடைத்­தாலும் சிறுகக் கடி­யுங்­கள். அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்­கிய உண­விற்கு செல்­லுங்கள். தேவை­யற்ற கலோ­ரி­களை உள்­ளெ­டுப்­பதை இதனால் தடுக்க முடியும். பழங்­களும் காய்­க­றி­களும் நிறைந்த உண­வு­களைத் தேர்ந்­தெ­டுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்­பிட கூடிய நேரம் தேவைப்­ப­டு­வதால் நீங்கள் ஆறு­த­லா­கவே சாப்­பிட முடியும். அது முன்­கூ­றிய நன்­மை­களைத் தரும்.

உணவு உட்­கொள்ளும் பாத்­தி­ரத்தை சிறி­தாகத் தேர்ந்­தெ­டுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும். மெது­வாகச் சாப்­பி­டுங்கள் என்­பது சொல்­வ­தற்கு சுலபம். ஆனால் மும்மு­ர­மான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்பி­டு­வது கஷ்­டம்தான். ஆனால் உணவு நேரங்­களை ஒழுங்­கு­ மு­றையில் கடைப்­பி­டித்து நேரம் தவ­றாது உண்­ணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்­பிடித்தால் நேரம் ஒதுக்­கு­வதில் சிர­ம­மி­ருக்­காது. ஒவ்­வொரு உணவு வேளைக்கும் குறைந்­தது 20 நிமி­டங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள். அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்.

virakesari.lk 06 09 2014